யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர், இன்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை நேரில் சந்தித்துத் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர்.
யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, இன்றுடன் 36வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் , தம்மை மீள் குடியேற்ற கோரி இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ் . மாவட்ட செயலகம் முன்பாகவும் பலாலி சந்திக்கு அருகிலும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி வலி. வடக்கு பிரதேச மக்கள் அப்பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
யுத்தம் நிறைவடைந்து 17ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் அப்பகுதி மக்கள் இன்னமும் மீள் குடியேற அனுமதிக்காது, அப்பகுதி மக்களின் காணிகளில் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தமது காணிகளில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றி , தம்மை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற அனுமதிக்க வேண்டும் என யாழ். மாவட்ட செயலகம் முன்பாகவும் பலாலி சந்திக்கு அருகிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது தமது காணி விடுவிப்பு தொடர்பான கோரிக்கை அடங்கிய மகஜர் அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டது.அத்துடன் ஆளுநரிடமும் சென்று மகஜர் கையளித்தனர். அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள், மத தலைவர்களிடமும் மகஜர் கையளித்தனர்.
மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர், ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்வதற்காக இரண்டு பிரதான கோரிக்கைகளைத் தமது மனுவில் முன்வைத்துள்ளனர்.
2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிஉயர் பாதுகாப்பு வலயம் தொடர்பான வர்த்தமானி (இல. 1810) முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
மயிலிட்டியில் தொடர்ச்சியாக நிலம் மீட்பதற்காக அறவழியில் போராடி வரும் ஜே/248, ஜே/251, ஜே/255 மற்றும் ஜே/246 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளுக்குட்பட்ட மக்களின் காணிகள் முதற்கட்டமாக விடுவிக்கப்பட வேண்டும்.
மக்களின் இந்தக் கோரிக்கைகள் அடங்கிய மனுவைப் பெற்றுக்கொண்ட ஆளுநர் , உரிய துரித நடவடிக்கைகளுக்காக அதனை உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த போராட்டத்தில் காணி உரிமையாளர்கள் , மத தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறிதரன், அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் பிரதேச சபை தவிசாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.
