Home இலங்கை வெப்பக் குறியீடு 45°C வரை அதிகரிக்கும்! வெளியில் செல்வது ஆபத்தாக அமையலாம் – மக்களுக்கு எச்சரிக்கை

வெப்பக் குறியீடு 45°C வரை அதிகரிக்கும்! வெளியில் செல்வது ஆபத்தாக அமையலாம் – மக்களுக்கு எச்சரிக்கை

0
image

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் வெப்பக் குறியீட்டு எண் (Apparent Temperature) 39 முதல் 45 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொலன்னறுவை உள்ளிட்ட பகுதிகளில் காலை 8.30 மணியளவிலேயே வெப்பநிலை 32 பாகை செல்சியஸைத் தாண்டியுள்ளதாகவும், 

இதனால் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையான காலப்பகுதியில் வெளியில் செல்வது ஆபத்தானதாக அமையக்கூடும் எனவும் வானிலை அதிகாரி சஜித் விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

எனவே, பிற்பகல் வேளைகளில் வெளியில் செல்வதை முடிந்தவரை தவிர்த்துக்கொள்ளுமாறும், போதுமான அளவு தண்ணீர் அருந்துவதுடன் குளிர்ச்சியான இடங்களில் தங்கியிருக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக தென்மேற்கு பிராந்தியத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சபரகமுவ, கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகமாகக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (23) மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்திலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

அத்துடன், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Source: https://samugammedia.com/the-heat-index-will-rise-up-to-45c-going-outside-could-be-dangerous–warning-to-people-1787484705

NO COMMENTS

Exit mobile version