Home இலங்கை வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 93 இலங்கையர்களுக்கு இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு!

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 93 இலங்கையர்களுக்கு இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு!

0
image

இலங்கையில் இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 93 சந்தேக நபர்களைக் கைது செய்து நாட்டுக்கு அழைத்து வருவதற்காக, இன்டர்போல் (Interpol) ஊடாக ‘சிவப்பு அறிவித்தல்கள்’ (Red Notices) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

“முழு நாடும் ஒன்றாக” எனும் தேசிய நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து விளக்கமளிப்பதற்காக நேற்று (13) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோது, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான (ASP) எஃப்.யு. வூட்லர் இதனைத் தெரிவித்தார்.

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளிலும், அத்துடன் இவ்வருடத்தின் இதுவரை கழிந்த காலப்பகுதியிலும், இன்டர்போல் சிவப்பு அறிவித்தல்கள் மூலம் 38 சந்தேக நபர்கள் இலங்கைக்குத் திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

அத்துடன், பொலிஸ்மா அதிபரின் (IGP) நேரடித் தலையீட்டின் மூலம் மேலும் முக்கிய 35 குற்றவாளிகள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட சந்தேகநபர்களால் சட்டவிரோதமாகச் சம்பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் வாகனங்கள், வீடுகள், தங்கம் மற்றும் காணிகள் உள்ளிட்ட பெருமளவிலான சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றனது. 

அதற்கிணங்க, இத்தகைய சொத்துக்களை அரசின் வசமாக்குவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையாக, 2024 ஆம் ஆண்டில் 1.49 பில்லியன் ரூபா மற்றும் 2025 ஆம் ஆண்டில் 1.549 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன், 2026 ஜனவரி 1 ஆம் திகதி முதல், சட்டவிரோதமாகச் சம்பாதிக்கப்பட்ட 839 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை அரசின் பொறுப்பிற்குள் கொண்டுவருவதற்கான ஆரம்பகட்ட சட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Source: https://samugammedia.com/interpol-issues-red-notice-for-93-sri-lankans-hiding-abroad-1786685738

NO COMMENTS

Exit mobile version