Home இலங்கை பிறந்தநாள் விருந்தில் துப்பாக்கிச்சூடு; இந்தியாவுக்குத் தப்பிய சந்தேகநபர்கள் இலங்கைக்கு நாடு கடத்தல்

பிறந்தநாள் விருந்தில் துப்பாக்கிச்சூடு; இந்தியாவுக்குத் தப்பிய சந்தேகநபர்கள் இலங்கைக்கு நாடு கடத்தல்

0
image

வத்தளை, கதிரான பகுதியில் உள்ள விடுதியொன்றில் இடம்பெற்ற பிறந்தநாள் விருந்தின்போது நபரொருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இரண்டு சந்தேகநபர்கள் இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற நிலையில், இந்திய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு நேற்று  (13) இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் சென்னையிலிருந்து நேற்று  பிற்பகல் 4.15 மணியளவில் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இருவரையும், விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வத்தளை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய மகேஸ்வரன் லுசிநாத் மற்றும் 34 வயதுடைய கணேசன் விக்னேஸ்வரன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் இலங்கைக்கு அழைத்து வரப்படுவது தொடர்பில் இந்திய பாதுகாப்புத் தரப்பினர் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு முன்னறிவித்தல் வழங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, விமான நிலையத்தை வந்தடைந்ததும் இருவரும் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இருவரும் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 23ஆம் திகதி இரவு வத்தளை பகுதியில் உள்ள விடுதியொன்றில் நடைபெற்ற பிறந்தநாள் விருந்தில் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார்.

இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/shooting-at-a-birthday-party-suspects-who-escaped-from-india-are-smuggling-people-to-sri-lanka-1786686168

NO COMMENTS

Exit mobile version