இலங்கையை மாறிமாறி ஆண்டுவந்த ராஜபக்சர்கள், ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச உள்ளிட்ட பழைய அரசியல் அதிகார கூடாரங்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, முதன்முறையாக அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சி அமைத்துள்ளது.
ஊழலில் மூழ்கிய முந்தைய மக்கள் பிரதிநிதிகளைத் தண்டிப்பதாகவும், திருடப்பட்டதாகக் கூறப்படும் சொத்துக்களை மீட்பதாகவும் அநுர தேர்தல் மேடைகளில் வழங்கிய வாக்குறுதியானது மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.
அந்த நம்பிக்கையின் பிரதிபளிப்பே வடக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றதோடு நாடாளுமன்றத்தில் 156 என்ற அதி உயர் பெரும்பான்மையை பெற்றுக்கொடுத்தது
இந்நிலையில், எதிர்வரும் டிசம்பர் 3ஆம் திகதி நமைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் தேசிய மக்கள் சக்திக்கு ஜனநாயக ரீதியிலான பலப்பரீட்சை ஒன்று தயாராக உள்ளது.
முதல் அமர்வு
இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று அதன் முதல் அமர்வானது கடந்த 21 ஆம் திகதி(21.11.2024) இடம்பெற்றது.
வரலாற்றில் முதன் முறையாக அதிஉயர் பெரும்பான்மை என்ற மக்கள் ஆணையை பெற்றுள்ள அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியானது எதிர்வரும் 5 ஆண்டுகள் ஆட்சியினை அமைக்கவுள்ளது.
இந்நிலையில் கடந்த முதல் அமர்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(Anura kumara Dissanayake) கூறியதை போல டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி அடுத்த நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது .
இதில் அரசாங்கத்தின் முக்கிய குழுக்களான கோப், கோபா, அரசாங்க நிதி பற்றிய அமைப்புகளுக்கு தலைவர்கள் சபாநாயகர்களால் நியமிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது நாடாளுமன்றத்தில் உள்ள நிதி சார்ந்த குழுவாகும்.
இக்குழுனது தெரிவுக்குழுவில் நியமிக்கப்படும் பத்து உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.
நிதி ஒழுங்கு முறைகள்
அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் வியாபார நடவடிக்கைகளினதும், அரச கூட்டுத்தாபனங்களினதும் கணக்குகளைப் பரிசோதிப்பதே இக்குழுவின் கடமையாகும்.
எந்தவொரு நபரையும் தம்முன் வரவழைத்து விசாரிக்கவும், பத்திரம், பதிவு, புத்தகம் வேறு ஏதாவது ஆவணங்கள் என்பனவற்றைத் தருவித்துப் பரிசோதிக்கவும், களஞ்சியங்களையும் சொத்துக்களையும் அணுகிச் சென்று ஆராயவும் இவ்விரு குழுக்களுக்கும் அதிகாரமுண்டு.
அரசாங்கக் கணக்குக் குழு, அரச நிறுவனங்களின் நிதிச் செயற்றிறன் பற்றி மேற்பார்வை செய்யும் அதேவேளை, அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவானது, அரசிற்கு நிதி தொடர்பாக அதிகாரமுள்ள, பொதுக் கூட்டுத்தாபனங்களிலும், பகுதி அரச நிறுவனங்களிலும், நிதி ஒழுங்கு முறைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு கடந்த 21.06.1979 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவானது, நாடாளுமன்ற அங்கத்துவத்துக்கேற்ப, 31 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.
அத்துடன், இது, நிலையியற் கட்டளை 126 இன் கீழ், ஒவ்வொரு புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பத்தின் போதும் இக்குழு நியமிக்கப்படுகிறது.
இக்குழுவின் தவிசாளர், முதலாவது கூட்டத்தின் போது, குழு உறுப்பினர்களால் நியமிக்கப்படுவார்.
இக்குழுவின் கடமையானது, அரசாங்கக் கூட்டுத்தாபனங்களினதும், அரசாங்கம் மேற்கொண்டுள்ள பிற வியாபாரங்களினதும், பரிசோதிக்கப்பட்ட கணக்குகள், வரவு-செலவுத் திட்டங்கள், மதிப்பீடுகள், நிதி நடைமுறைகள், செயற்பாடு மற்றும் முகாமைத்துவம் பற்றி நாடாளுமன்றத்திற்கு அறிவித்தலாகும்.
குழுவிற்கான அதிகாரம்
இந்நிறுவனங்களின் கணக்குகள் முதலில், கணக்குப் பரிசோதகர் – தலைமையதிபதியினால் பரிசோதிக்கப்படும்.
இக்குழுவின் பரிசோதனைகள் இவ்வறிக்கைகளிலேயே தங்கியிருக்கும்.
குழு அவசியமெனக் கருதுமிடத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், வேறு பிறருக்கும், சாட்சியம் எதனையும் பெறும் பொருட்டோ அல்லது ஆவணங்களைக் கோரியோ அழைப்பு விடுப்பதற்கு குழுவிற்கு அதிகாரம் உண்டு.
இக்குழு நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கும் அறிக்கைகளில் உள்ளடக்கப்படும் சிபாரிசுகள், சம்பந்தப்பட்ட கூட்டுத்தாபனங்கள் அல்லது சட்ட ரீதியிலான நிர்வாக சபைகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளாகக் கருதப்படுகின்றன.
இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது ஜனநாயகத்தை கருதுகோளாக கொண்டே தனது அரசியல் நடைமுறையே முன்னெடுத்து வருகிறது.
அந்தவகையில் அரசியலின் அதி உயர் சபையான நாடாளுமன்றின் ஜனநாயகத்தை அக்கட்சி மதிக்கும் என்றால், அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (COPE), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (COPA), அரசாங்க நிதி பற்றிய குழு(Committee on Public Financ) ஆகியவற்றின் தலைமைப்பதவியை எதிரணிக்கு ஒப்படைக்க வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் தற்போது சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதி தவிசாளர் பதவிகள் ஆளுங்கட்சி வசம் உள்ள நிலையில், மேற்படி குழுக்களின் தலைமைப்பதவியை எதிரணிக்கு வழங்குவது நாடாளுமன்றில் ஜனநாயகம் பேனப்படும் என எதிர்பார்க்கப்படகிறது.
ரஞ்சித் பண்டார
கடந்த 2015 மே் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கோப் குழுவின் தலைமைப்பதவி தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரான சுனில் ஹந்துனெத்திக்கு வழங்கப்பட்டது.இது ஆளுங்கட்சியினால் நியமிக்கப்பட்டது.
எனினும், 2019ஆம் ஆண்டுக்கு பின்னர், கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் மேற்படி குழுக்களுக்களின் தலைமைப்பதவிகளுக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்களே நியமிக்கப்பட்டிருந்தனர்.
பின்னர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சிகாலத்தில் கடும் போராட்டத்துக்கு மத்தியில் அரசாங்க நிதி குழுவின் தலைமைப்பதவி ஹர்ஷ டி சில்வாவுக்கு வழங்கப்பட்டது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை கோப் குழுவுக்கு(14.11.2023) அன்று அழைக்கப்பட்டபோது, அப்போதைய ரஞ்சித் பண்டார, கருத்து வெளியிடவேண்டாம் என்ற தொனியில் சைகை காட்டி, கிரிக்கெட் சபையை பாதுகாப்பதற்கு எடுத்த முயற்சி சமூக ஊடகங்கில் பேசுபொருளாகியது.
மேலும் இந்த ஆண்டு ரணிலின் ஆட்சிகாலத்தில் அதாவது, மார்ச் மாதம் அளவில் அப்போதைய ஆளும் தரப்பின் உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன கோப் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
எனினும் எதிர் தரப்புக்களினால் இது நாடாளுமன்றத்தை மலினப்படுத்தும் செயற்பாடு என எதிர் தரப்புக்கள் விமர்சித்திருந்தன.
ரோஹித அபேகுணவர்தனவை பதவி நீக்கி தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என கோரிக்கைகளும் வெளிவர ஆரம்பித்தன.
கோப் மற்றும் கோபா
இதன்படி நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி வசம் 159 உறுப்பினர்கள் உள்ள நிலையில்,கோப், கோபா உள்ளிட்ட குழுக்களின் தலைமைப்பதவியை எதிரணிக்கு வழங்கினால் அது அரசின் பண்முகப்படுத்தப்பட்ட தன்மைக்கு உதாரணமாக அமையும் என கூறப்படுகிறது.
இது எதிர்கால அரசியலுக்க ஆரோக்கியமானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.