Home இலங்கை அரசியல் வடக்கின் 454 சுகாதார ஊழியர்களையும் விரைந்து பணியிணைக்குமாறு கோரிக்கை

வடக்கின் 454 சுகாதார ஊழியர்களையும் விரைந்து பணியிணைக்குமாறு கோரிக்கை

0

வடமாகாணத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு சுகாதார ஊழியர் (தரம் – III) சேவைக்கு
முறையாக நேர்முகத்தேர்வு நடாத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 454 சுகாதார
ஊழியர்கள் இதுவரை பணியிணைப்பு செய்யப்படாமை குறித்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பினார். 

நேற்று (22.08.2025) நாடாளுமன்றில் வாய்மூல
விடைக்கான வினா நேரத்தில் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சிடம் கேள்வி
எழுப்பியிருந்தார்.

அத்தோடு வடமாகாணத்தில் சுகாதாரச் சேவைகளை வினைத்திறனாக முன்னெடுப்பதற்கு 643
சுகாதார ஊழியர்களின் வெற்றிடங்கள் தடையாக உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். 

நேர்முகத்தேர்வு 

நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், 2019ஆம் ஆண்டில் முறையாக நேர்முகத்தேர்வு நடாத்தப்பட்டு
தெரிவுசெய்யப்பட்ட 454 பேரையும் விரைந்து பணியிணைப்புச் செய்வதற்கான
நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இதன்போது வலியுறுத்தினார்.

இந்நிலையில், கடந்த காலத்தில் முற்று முழுதான அரசியல் தலையீட்டுடன் இந்த
454 பேருடைய பணிஇணைப்பு நிறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்த சுகாதார மற்றும்
வெகுசன ஊடக பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி, அவ்வாறு நியமனம் வழங்கப்பட்ட
சுகாதார ஊழியர்களை இரத்துச்செய்வதற்கு எந்த சட்ட அடிப்படையும் இல்லை எனவும்
சுட்டிக்காட்டினார்.

ஆகவே குறித்த சுகாதார ஊழியர்களாக பணிநியமனம் வழங்கப்பட்டு, பணி இணைப்புச் செய்யப்படாத 454பேரையும் பணியில் இணைத்துக்கொள்ளும் நிலைப்பாட்டிலேயே
அரசாங்கமும் உள்ளதாகவும் பிரதிஅமைச்சர் மேலும் தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version