குருநாகல் (Kurunegala) – மாவதகம, பரகஹதெனிய, சிங்கபுர வீதி பகுதியில் வயல் ஒன்றில் புதிதாகப் பிறந்த சிசு ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
வயலில் நடந்து சென்ற கிராமவாசி ஒருவர், நேற்று (17.07.2025) காலை வயலில் உள்ள ஒரு மரத்தின் கீழ் புதிதாகப் பிறந்த சிசு ஒன்று கிடப்பதைக் கண்டுள்ளார்.
பின்னர் சம்பவம் தொடர்பில் குறித்த நபர் மாவதகம காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.
ஆரம்ப பரிசோதனை
அதன்படி, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கிருந்த பெண்களிடம் சிசுவை எடுக்குமாறு கூறினர். எனினும், சம்பவ இடத்திற்கு வந்த ஒரு இளைஞர் தனது டி-சர்ட்டைக் கழற்றி சிசுவை மூடி, அதனைத் தன் கைகளில் எடுத்தார்.
அதன் பிறகு, காவல்துறை அதிகாரிகளும் அப்பகுதி மக்களும் சேர்ந்து சிசுவை சம்பவ இடத்திலிருந்து எடுத்து மாவதகம வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
சிசுவை பரிசோதித்த வைத்தியர் ஒருவர், சிசு பிறந்து ஒன்று அல்லது இரண்டு நாட்கள் ஆகியிருக்கும் என்று தெரிவித்தார்.
மேலதிக விசாரணை
ஆரம்ப பரிசோதனைகளுக்குப் பிறகு, மாவதகம வைத்தியசாலை அதிகாரிகள் சிசுவை குருநாகல் போதனா வைத்தியசாலையின் ஆரம்ப குழந்தை பராமரிப்பு பிரிவுக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிசுவை இவ்விடத்தில் யார் கைவிட்டனர் என்பது இன்னும் தெரியவில்லை.
ஆனால் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக வைத்தியசாலை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
