பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான இரண்டு மாத சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகள் வழங்கப்படும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் (05) நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும், அவர்கள் பணிக்கு சமுகமளிக்காத நாட்களை விடுமுறை நாட்களாக கருதி எவ்வித அபராதமும் இன்றி மீண்டும் பணிக்கு சமுகமளிக்கும் சந்தர்ப்பம் உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க உள்ள இளைஞர்களின் வாழ்க்கையை மேலும் குழப்பாமல் பணிக்கு சமுகமளிக்குமாறு அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களை கேட்டுக்கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
தேசிய கல்வியியற்கல்லூரிகளுக்கு புதிய மாணவர்கள் இணைத்தல்
இதேவேளை,பல வருடங்களாக நிலவிவரும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதில் இருந்து அகில இலங்கை ஆசிரியர் கல்வியாளர் சேவை உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கம் விலக தீர்மானித்துள்ளது.
இணைய முறை மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்ட புதிய மாணவர்களை ஆட்சேர்ப்பு செய்யும் பணியை தொடங்குமாறு கல்வி அமைச்சகம் அனைத்து கல்லூரிகளுக்கும் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமது கோரிக்கைகள் தொடர்பில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்கும் வரை எந்தவொரு பணிகளையும் ஆரம்பிக்கப்போவதில்லை என சங்கத்தின் செயலாளர் தம்மிக்க மிரிஹான தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.