Home இலங்கை அரசியல் நாடாளுமன்றில் சிறீதரன் முன்வைத்த பிரேரணை : வலியுறுத்தப்பட்டுள்ள விடயங்கள்

நாடாளுமன்றில் சிறீதரன் முன்வைத்த பிரேரணை : வலியுறுத்தப்பட்டுள்ள விடயங்கள்

0

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதப் பிரேரணை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் (S. Shritharan) நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

நாடாளுமன்றில் இன்று (22) முன்வைத்த குறித்த பிரேரணையில் பின்வரும் விடயங்கள் உள்ளடங்கியுள்ளன.

1.தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு

தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான, நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை அடைவதற்கு அதிகாரப் பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குதல் அவசியமாகும்.

2.கடந்த 8 ஆண்டுகளாக தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

3. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவித்தல் அல்லது விரைவான, நியாயமான விசாரணைகளை உறுதி செய்தல்.

4.ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை

ஊடகவியலாளர்கள் மற்றும் சுயாதீன ஊடகவியலாளர்கள் மீதான விசாரணைகள் மற்றும் துன்புறுத்தல்களை நிறுத்துதல்.

5.மலையகப் பெருந்தோட்ட மக்களின் உரிமைகள் 

தனி வீட்டு உரிமை, வாழ்விடக் காணி உரிமை, மற்றும் வாழ்வாதாரக் காணி உரிமை ஆகியவற்றுக்கான முன்னெடுப்புகள் நம்பிக்கை தரும் வகையில் முன்னெடுக்கப்படவில்லை.

வீடமைப்பு உதவிகள் உள்ளிட்ட கடந்தகால முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன; மாற்று முற்போக்கு யோசனைகள் முன்வைக்கப்படவில்லை.

6.உள்நாட்டு இடம்பெயர்ந்தோர் மற்றும் காணி விடுவிப்பு

கடந்த 35 ஆண்டுகளாக உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற முடியாத நிலை.

வடக்கு, கிழக்கில் முப்படைகளால் கையகப்படுத்தப்பட்ட அரச மற்றும் தனியார் காணிகளை விடுவித்து, மீள்குடியேற்றத்துடன் இயல்பு வாழ்க்கையை உறுதி செய்தல்.

7.கல்வி மற்றும் மலையகப் பாடசாலைகள்

1977க்குப் பின்னர் தாமதமாக அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய கல்விக் கட்டமைப்பில் மலையகப் பாடசாலைகள் பின்தங்கிய நிலையில் உள்ளன. கல்வி அமைச்சின் புதிய கல்விச் சீர்திருத்த யோசனைகளில் விசேட ஒதுக்கீட்டு கொள்கைகள் மூலம் மலையகக் கல்விக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை.

8.தொல்லியல் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு

தமிழர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமித்து, அவற்றின் கலாசார முக்கியத்துவத்தை புறக்கணித்தல்.

9.விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்களின் நெருக்கடிகள்

இலங்கையில் விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படவில்லை.

10.வலிந்து காணாமலாக்கப்பட்டோர் மற்றும் மனித எச்சக் குழிகள்

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வழங்குவதற்கு பக்கச்சார்பற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

யாழ்ப்பாணம் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானம் உட்பட வடக்கு, கிழக்கில் கண்டறியப்பட்ட மனித எச்சக் குழிகள் தொடர்பாக நீதியான விசாரணைகளை மேற்கொள்ளல்.

11.மலையகத் தமிழர்கள் தொடர்பான ஹட்டன் பிரகடனம் (15.10.2023)

காணி, வீடமைப்பு, அரச சேவைகளில் சம வாய்ப்பு, கல்வி, சுகாதாரம், வருமானம், சம்பளம், வறுமை, மற்றும் பெருந்தோட்டப் பெண்களுக்கு எதிரான பாரபட்சம் ஆகியவை தொடர்பாக எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.

12.வடக்கு, கிழக்கில் இராணுவத் தலையீடுகள்

தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கையில் இராணுவத் தலையீடுகளை குறைத்து, சிவிலியன் நிர்வாகத்தை மீளமைத்தல்.

13.மனித உரிமைகளுக்கான பக்கச்சார்பற்ற விசாரணைகள்

 தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் தொடர் மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்குவதற்கு பக்கச்சார்பற்ற, வெளிப்படையான விசாரணைகளை உறுதி செய்தல்.

சிறீதரனால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட குறித்த பிரேரணையை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் (Mano Ganesan) வழிமொழிந்தமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் – கொடியிறக்கம்

https://www.youtube.com/embed/5v3KHImFEDU

NO COMMENTS

Exit mobile version