Home இலங்கை அரசியல் இலங்கைக்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் மன்னிப்புச்சபை

இலங்கைக்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் மன்னிப்புச்சபை

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம், சர்வதேச விசாரணையின் தேவையை வலியுறுத்துவதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது அமர்வில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் தொடர்பிலேயே மன்னிப்பு சபை இதனை குறிப்பிட்டுள்ளது.

இந்த தீர்மானத்தின்படி, இலங்கையின் பொறுப்புக்கூறல் திட்டம் உட்பட மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஆணை ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியாவிற்கான பிரதிப் பிராந்தியப் பணிப்பாளர் பாபு ராம் பந்த் கூறியுள்ளார்.

மனித உரிமைகள் பேரவை

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டமையானது, இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மீதான சர்வதேச விசாரணை அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும் மன்னிப்புசபை தெரிவித்துள்ளது.

பொறுப்புக்கூறலை ஆதரிப்பதில் ஆணை நீடிக்கப்படுவது வரவேற்கத்தக்கது. எனினும், உள்ளூர் சிவில் சமூகம் மற்றும் சர்வதேச அமைப்புகளால் குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் இந்த ஆணை புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு மாறாக, ஒரு வருடத்திற்கு மட்டுமே நீடிக்கப்பட்டது என்பது ஏமாற்றமளிப்பதாக மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் இலங்கையின் புதிய அரசாங்கம் கடந்த காலத்திலிருந்து விலகி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை மற்றும் மனித உரிமைகள் அலுவலகத்துடன் முழுமையாக ஈடுபடுவது மிகவும் முக்கியமானது என்றும் மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

ஜெனீவா  தீர்மானம்

ஜெனீவாவின் 46-1 தீர்மானத்தின்படி, இலங்கை பொறுப்புக்கூறல் திட்ட அலுவலகத்தின் ஆணைமுதன்முதலில் 2021 இல் ஸ்தாபிக்கப்பட்டது.

இது எதிர்கால பொறுப்புக்கூறல் முயற்சிகளுக்காக மொத்த மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கவும், ஒருங்கிணைக்கவும், பகுப்பாய்வு செய்யவும் மற்றும் பாதுகாக்கவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகத்தை கட்டாயப்படுத்தியது.

இந்தநிலையில் குறித்த ஆணை 2022 இல் 51-1 தீர்மானம் மூலம் நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version