அம்பாறை மாவட்ட தமிழ்ப் பிரதேசங்களின் காணி உள்ளிட்ட பல பிரச்சினைகள்
தொடர்பில் எமது கட்சி சார்பாக அரசுக்குக் கடிதம் அனுப்பப்படும் என கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்ற
உறுப்பினர்களுக்கான கூட்டம் இன்று காலை ஆலையடிவேம்பில்
நடைபெற்றபோது, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பிரதேசத்தில் நடைபெறுகின்ற அரச நிகழ்வுகளில் எமது கட்சியின் உள்ளூராட்சி
சபையின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் புறக்கணிக்கப்படுவது குறித்து கூறப்பட்டது.
சட்ட ரீதியாக அணுகல்
இது குறித்து சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப வேண்டும். வீரமுனை வளைவு தொடர்பில் நாளை நீதிமன்றத்துக்குச் செல்கின்றோம். கல்முனை
வடக்கு பிரதேச செயலக வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. எனவே, அது சட்ட ரீதியாக
அணுகப்படும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொத்துவில், திருக்கோவில், காரைதீவு, சம்மாந்துறை, நாவிதன்வெளி ஆகிய பிரதேச சபைகளில் உள்ள கட்சியின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டு காணி விடுவிப்பு, கல்முனை வடக்கு பிரதேச செயலகம், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், வீரமுனை வரவேற்பு வளைவில் பெயர்ப்பலகை, கல்முனை மத்தி வலயம், சமகால அரசின் புறக்கணிப்பு தொடர்பாகப் பல பிரச்சினைகளை முன்வைத்தனர்.
