இலங்கையின் இனப்பிரச்சினை சம்மந்தமாகவும் அதற்கான தீர்வு குறித்தும் ஜனாதிபதி அநுரகுமார தனது சிம்மாசன உரையில் பேசவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,
அக்கட்சியின் ஊடகப்பேச்சாளருமான ஞானமுத்து சிறிநேசன் (Gnanamuththu Srinesan) தெரிவித்துள்ளார்.
களுவாஞ்சிகுடியில் இன்று (25.11.2024) நடைபெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும்
தெரிவிக்கையில், ”இலங்கையின் பத்தாவது நாடாளுமன்ற முதலாவது அமர்வின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தனது சிம்மாசன பிரசங்க உரையை
நிகழ்த்தி இருந்தார்.
ஜனாதிபதி சுட்டிக்காட்டவில்லை
அந்த உரையின்போது ஜனாதிபதி கூறிய முற்போக்கான கருத்துக்களை பொதுவாக நாங்கள் ஏற்றுக்
கொள்கின்றோம். வரவேற்கின்றோம் இருந்த போதிலும் அங்கு காணப்பட்ட குறைபாட்டை
குறிப்பிட்டாக வேண்டும்.
புரையோடி போயிருக்கின்ற இனபிரச்சினை விடயமாகவும், அதற்கான அதற்கான தீர்வு என்ன
அதனை எவ்வாறு கையாள்வது, அதனை எவ்வாறு தீர்ப்பது, என்பது தொடர்பில் ஜனாதிபதி அந்த
இடத்தில் சுட்டிக்காட்டி இருக்கவில்லை.
ஈழத் தமிழர்களைப்
பொறுத்தவரையில் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதற்காக தந்தை
செல்வநாயகம் 30 ஆண்டுகள் அறவழிப் போராட்டத்தை நடத்தி இருக்கின்றார். அதனை அடுத்து போராளிகள் ஏறத்தாள 30 ஆண்டுகள் ஆயுதப் போராட்டத்தை நடத்தி
இருக்கின்றார்கள்.
யுத்தம் மௌனிக்கப்பட்டதும் பின்னர் 2009க்கு பிற்பட்ட
காலத்தில் இராஜதந்திர வழியில் அதனை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் பல
நடத்தப்பட்டிருக்கின்றன.
தேசிய மக்கள் சக்தி
இவ்வாறு இருந்தும் இனப்பிரச்சினையை தீர்த்து
வைப்பதற்கான எந்த ஒரு நடவடிக்கையையும் தென்னிலங்கையில் இருக்கின்ற சிங்கள
தலைவர்கள் எடுக்கவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திர கட்சி,
பொதுஜன பெரமுன கட்சி, போன்ற கட்சிகள் தமிழ் மக்களை ஏமாற்றியே வந்திருக்கின்றன. இருந்த போதிலும் அண்மையில் ஆட்சி பீடம் ஏறிய தேசிய மக்கள் சக்தி மாற்றத்தை ஏற்படுத்த போகின்றோம் என சொல்கின்றார்கள்.
ஆகவே தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறை பற்றி எதுவும் பேசாதது தமிழர்களை பொறுத்தவரையிலும், தமிழரசு கட்சியைப்
பொறுத்தவரையிலும் தமிழ் தேசிய கட்சிகளைப் பொறுத்தவரையிலும், ஒரு ஏமாற்றத்தை
தருகின்ற விடயமாக அமைந்திருக்கின்றது.
எனவே மாற்றத்தையும் தேசிய ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதாக இருந்தால் தேசிய இனப்பிரச்சினை நியாயமான
வழியில் தீர்க்கப்பட வேண்டும். வட கிழக்கிலே தமிழ் பேசுகின்ற
மக்களுக்கு சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் சுயாட்சி கிடைக்க வேண்டும்.
சமஸ்ட்டி முறையிலான தீர்வு கிடைக்க வேண்டும்.
காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விசாரணை
காணாமலாக்கப்பட்ட உறவுகள் தொடர்பாக சர்வதேச விசாரணை, நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும். அதாவது
அவர்களுக்குரிய நீதி பரிகாரம் கிடைக்க வேண்டும். இறுதி யுத்தத்தின் போது ஒரு
இலட்சத்து 46 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாக முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப்
அவர்கள் ஒரு சாட்சியம் அளித்து இருக்கின்றார். மோசமான மனித உரிமை மீறல்களுக்கான தீர்வு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்கள் குறித்து ஜனாதிபதி பேசவில்லை.
எனவே ஜனாதிபதியிடம் நாங்கள் கேட்டுக் கொள்வது தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு, காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான நியாயமான ஒரு தீர்வு
அல்லது நியாயமான நீதி பரிகாரம் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை என்பனவே ஆகும்.
வடக்கு
கிழக்கிலும் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் விடிவுக்காக விடுதலைக்காக ஆயுதம்
போராடிய போராளிகள் விடயத்தில் தேசிய மக்கள் சக்திக்கு ஒத்து உணர்ந்து கொள்ளக்கூடிய
வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
அவர்களுடைய எளிமையான போக்குகள் ஆடம்பரமற்ற ஆட்சி முறை, ஆடம்பரமற்ற நிகழ்வுகள்,
என்பன மக்களுக்கு கவர்ந்தாலும், தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்களுடைய
தீர்வு என்கின்ற விடயம் மிகவும் முக்கியமானதாக கருதப்பட வேண்டும்.
தமிழர்களை பாதிக்கக்கூடிய ஆட்சி முறைகள்
அந்த தீர்வு
என்பது ஒற்றை ஆட்சி முறைகள் அற்ப சொற்பமான அதிகாரங்களை கொடுத்து அவற்றை அவ்வாறே
கட்டுப்படுத்தி விடுவதாக அமையக்கூடாது. சமத்துவமான உரிமைகளை கொடுத்து ஒற்றை ஆட்சியின் கீழ் தமிழர்களே
ஆட்சி செய்யலாம் அதுதான் தீர்வாக இருக்கலாம் என அவர்கள் நினைக்கலாம்.
ஆனால்
அரசியல் யாப்பு ரீதியாக அதிகாரப்பகிர்வு நியாயமாக வரையறுக்கப்படாது
விட்டால் ஆட்சி மாற்றங்கள் ஏற்படுகின்ற போது இனவாத சக்திகள் தென்னிலங்கையில்
காணப்படுகின்ற அடிப்படை வாதிகள் ஆட்சியை கைப்பற்றுகின்ற போது மீண்டும்
தமிழர்களை பாதிக்கக்கூடிய விதத்தில் அவர்களுடைய ஆட்சி முறைகளைக் கொண்டு
செல்வதற்கான வாய்ப்பு அதிகமாகிறது.
எனவே இந்த நாட்டின் பல்லின சமூகம் பல் மதங்களைக் கொண்ட பண்பாடுகளை உடைய
மக்கள் நிம்மதியாக அமைதியாக வாழ்வதாக இருந்தால் தேசிய இனப்பிரச்சனைக்குரிய தீர்வு கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.“ என தெரிவித்தார்.