Home இலங்கை அரசியல் இனப்பிரச்சினைக்கு ஜே.வி.பியின் தீர்வு: சுமந்திரன் வெளியிட்டுள்ள தகவல்

இனப்பிரச்சினைக்கு ஜே.வி.பியின் தீர்வு: சுமந்திரன் வெளியிட்டுள்ள தகவல்

0

தேசிய இனப்பிரச்சினைக்குப் புதிய அரசமைப்பு மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என தேசிய மக்கள்
சக்தியின் (NPP) தலைவர் அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayakke) கருதுவதாக நாடாளுமன்ற
உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M.A. Sumanthiran) தகவல் வெளியிட்டுள்ளார்.

தேசிய மக்கள்
சக்தியினருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் இன்று (11.06.2024) காலை இடம்பெற்ற சந்திப்பிலேயே அநுர குமார திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறியதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“மாகாண சபை முறைமை முழு அளவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை 2019
ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே தாங்கள் இடம்பெறச் செய்துள்ளனர் என்பதை
அவர்கள் சுட்டிக்காட்டினர்.

தேர்தல் விஞ்ஞாபனம்

தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு 13ஆவது திருத்தம் தீர்வாகாது என்று தமிழர்
தரப்பு கூறுவதைப் போலவே, அது தீர்வு அல்ல என்பதைத் தாங்களும்
ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டிய அநுரகுமார திஸாநாயக்க, தேசிய இனப்
பிரச்சினைக்குத் தீர்வு புதிய அரசமைப்பு மூலமே எட்டப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதுவரை மாகாண சபை முறைமை நீடிக்க வேண்டும். தாமதிக்காமல் மாகாண சபைத்
தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். 13ஆம் திருத்தம் மூலம் அரசமைப்புக்கு
வழங்கப்பட்டுள்ள அனைத்து ஏற்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும்
அவர் கூறினார்.

அதனையடுத்து, உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் பகிரங்க அறிவிப்புக்களிலும் இவற்றை வெளிப்படுத்துங்கள். நாம் பரிசீலித்து உரிய முடிவை எடுப்போம் என்று
அவர்களுக்குத் தெரியப்படுத்தினோம்” என்றார்.

NO COMMENTS

Exit mobile version