இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் புலனாய்வு கண்காணிப்பு கடமைகளை மேலும் விரிவுபடுத்துமாறு பாதுகாப்பு படைத் தளபதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமாரவினால் முன்வைக்கப்பட்ட தூய்மையான இலங்கை வேலைத்திட்டத்திற்கு அமைவாக இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இலங்கை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பின் கீழ், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 370 வழக்குகளில் 451 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள்
இந்த நடவடிக்கைகளின் போது, கிட்டத்தட்ட 3570 கிலோ கஞ்சா, 1040 கிலோ கேரள கஞ்சா, 11 கிலோ ஐஸ் மற்றும் 61 கிலோ ஹெரோயின் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், குஷ் மற்றும் ஹாஷிஸ் போதைப் பொருள்ட்ளும் இதன்போது கைப்பற்றப்பட்டதோடு சுமார் 850 லீற்றர் சட்டவிரோத உள்நாட்டு மதுபானம் மற்றும் 15,000 லீற்றர் கோடா மற்றும் 68 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 7340 கிலோ பீடி இலைகளும் கைப்பற்றப்பட்டதோடு 17,000 சிகரெட்டுக்களும் கைப்பற்றப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.