Home இலங்கை சமூகம் இனத்தின் இருப்பைத் தக்கவைப்பதில் கலைஞர்களின் பணிகள் காத்திரமானவை : சிறீதரன்

இனத்தின் இருப்பைத் தக்கவைப்பதில் கலைஞர்களின் பணிகள் காத்திரமானவை : சிறீதரன்

0

இழந்துபோன தமது இறைமையை நிலைநாட்டி, இலங்கைத் தீவில் தமது இருப்பை மீள நிலைநிறுத்தப் போராடும் ஈழத்தமிழினத்தின் வரலாற்றில், கலைஞர்களின் பணிகள் மிகக் காத்திரமான இடத்தைப் பெறுகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.

‘பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது’, ‘போரம்மா உன்னையன்றி யாரம்மா’ உள்ளிட்ட எழுச்சிப் பாடல்களினது குரலாகவும், யாழ்ப்பாணத்தின் பெருமளவு ஆலயங்களின் சிறப்பைப் பாடிய பக்தியின் குரலாகவும் தாயக இசைத்துறை வரலாற்றில் தனியிடம் பெற்றிருந்த, கரவைக்குமரன், மாமனிதர் செல்லத்துரை குமாரசாமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தலும் திருவுருவச்சிலை திறப்பும் அண்மையில் யாழ்.உடுப்பிட்டியில் நடைபெற்றிருந்தது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், அன்னாரது திருவுருவச்சிலையை திரைநீக்கம் செய்ததுடன், ‘குமாரசாமி இசைத்தமிழ்க் கழகம்’ என்னும் இசைக் கல்லூரியையும் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைத்து உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

மக்கள் எதிர்கொண்ட அவலங்கள்

அவர் மேலும் தெரிவிதத்தாவது,

ஒரு சமூகத்தின் அக உணர்வுகளை, அகப்புறச் சூழலின் தாக்கங்களை, யதார்த்தப் புறநிலைகளை, காலப்பிரவாகத்தை, வரலாற்றை, கடந்துவந்த பாதைகளை, அச்சமூகத்தின் உண்மை உணர்வுகளை பதிவு செய்வதிலும், அடுத்த தலைமுறைக்கு அவற்றின் அடிமுறை பிறழாது கடத்துவதிலும் கலை எனும் ஊடகமே முன்னணி வகிக்கிறது.

அந்த அடிப்படையில், எமது மக்களின் தேசவிடுதலைக் கனவைச் சுமந்து நிகழ்ந்தேறிய போரின் தாற்பரியத்தை, அதன்பாலிருந்த நியாயத்தை, அடக்குமுறையாளர்களால் எமது மக்கள் எதிர்கொண்ட அவலங்களை வெளிக்கொணரும் பணிக்கு கால்கோலாக இருந்த ‘தமிழீழ எழுச்சிப் பாடல்களின்’ மறக்கவியலாத குரலாக மாமனிதர் குமாரசாமி ஐயாவின் குரல் ஈழத்தமிழர்களின் மனங்களெங்கனும் நிறைந்தே இருக்கும் என்றார்.

கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் அதிபர் செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கலைஞர்கள், இசை ஆர்வலர்கள், அன்னாரது குடும்பத்தினர், கரவெட்டிப் பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version