Home இலங்கை பொருளாதாரம் அடுத்த வருடம் முதல் புதிய அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பம்! ஆசிய அபிவிருத்தி வங்கி

அடுத்த வருடம் முதல் புதிய அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பம்! ஆசிய அபிவிருத்தி வங்கி

0

2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இலங்கையில் பல புதிய அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்தத் திட்டங்களில் கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.

இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் திட்டங்களுக்கு தொடர்ந்தும் நிதி வழங்க தயாராக இருப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கி உறுதியளித்துள்ளது.

ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்

இதேவேளை, மாகாண ஆளுநர்களின் மேற்பார்வையின் கீழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களால் மேற்பார்வையிடப்படும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஜனாதிபதியின் உத்தரவை, தேர்தல் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது.

ஆளுநர்கள் அரசியல் ரீதியாக நியமனம் செய்யப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் இதுபோன்ற நடவடிக்கைகள் தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் அமையும் என்று தேர்தல் ஆணைக்குழு கருதுகிறது.

முன்னதாக, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து செயலிழந்துபோன அபிவிருத்தித் திட்டங்களின் செயற்பாடுகளை மாகாண ஆளுநர்களின் ஒருங்கிணைப்பின்கீழ் தொடரக்கூடிய முறையான பொறிமுறையை வகுக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு ஜனாதிபதியின் செயலாளர் அறிவுறுத்தியிருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட பரவலாக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதிகளின் மூலம் இந்த திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

ஏற்கனவே யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய ஐந்து வடமாகாண மாவட்டங்களில் அடுத்த வாரம் அபிவிருத்திக்கான கூட்டங்களை நடத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தபோதும், தேர்தல் ஆணைக்குழுவின் தலையீட்டினால் அது கைவிடப்பட்டன.

இவ்வாறான நிலையில், நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லலாம் என மாவட்டச் செயலாளர்களுக்கு, தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version