வங்கதேசத்தில் மேலும் ஒரு மாணவர் தலைவர் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதால் அந்நாட்டில் உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது.
வங்கதேச மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி. கடந்த 18ம் திகதி அவாமி லீக் கட்சியினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த விவரம் வெளியானவுடன் வங்கதேசத்தில் கலவரம் வெடித்தது.
மைமென்சிங் நகரில் ஹிந்து இளைஞர் திபு சந்திர தாஸ் என்பவரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. நுாற்றுக்கணக்கானோர் முன்னிலையில் அவரின் உடலை மரத்தில் கட்டி தீயிட்டு எரித்தது.
மற்றுமொரு மாணவ தலைவர் மீது துப்பாக்கிசூடு
இந் நிலையில், மேலும் அங்கு மற்றொரு மாணவர் தலைவர் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
தலையில் சுடப்பட்டவர் வங்கதேச தேசிய குடிமக்கள் கட்சியின் குல்னா மண்டல தலைவர் மொடலெப் சிக்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
தலையில் குண்டு பாய்ந்த நிலையில், அவர் உடனடியாக அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மொடலெப் சிக்தர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அபாய கட்டத்தை தாண்டி விட்டாலும், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் அவர் உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அடுத்தடுத்து நிகழந்த இதுபோன்ற சம்பவங்களினால் வங்கதேசத்தில் பதற்றமான நிலை காணப்படுகிறது.
