Home இலங்கை சமூகம் நுவரெலியாவில் சிறுவனை தாக்கிய மட்டக்குதிரை! பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை

நுவரெலியாவில் சிறுவனை தாக்கிய மட்டக்குதிரை! பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை

0

நுவரெலியா(Nuwara eliya) – கிரகரி வாவிக்கரையோரத்தில் மட்டக்குதிரை ஒன்று தாக்கியதில் சிறுவன் ஒருவன் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம், நேற்று(28.12.2024) மாலை இடம்பெற்றுள்ளது.

வருட இறுதி என்பதால் தினமும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணிகள் நுவரெலியாவிற்கு வந்து செல்கின்றனர்.

காயமடைந்த சிறுவன்

அவ்வாறு வருகை தந்த உள்நாட்டு சுற்றுலா பயணிகள் கிரகரி வாவி கரையோர வீதியில் நடந்து சென்ற போது சவாரிக்காக கொண்டு வரப்பட்ட மட்டக்குதிரை ஒன்று திடீரென சிறுவனை தாக்கி காயப்படுத்தியதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, காயமடைந்த சிறுவனுக்கு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமையில் இருந்த நுவரெலியா காவல் நிலைய உத்தியோகத்தர்களிடம் முறைப்பாடு செய்து சிறுவனை தாக்கிய மட்டக்குதிரையின் உரிமையாளர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக நுவரெலியாவில் சுற்றி திரியும் மட்டக்குதிரைகள் பிரதான வீதிகளில் தாறுமாறாக ஓடி சுற்றுலா பயணிகளை உதைப்பதும், கடிப்பதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இதன் காரணமாக நுவரெலியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

எனவே வீதிகளில் சுற்றித்திரியும் மட்டக்குதிரைகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இப்பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து மட்டக்குதிரை வளர்ப்போருக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதையும் மீறும் பட்சத்தில் மட்டக்குதிரையை பறிமுதல் செய்து அதிகரித்த தண்டப்பணத்தை விதிக்க வேண்டும் என பொது மக்களும், வாகன சாரதிகளும் கோரிக்கை விடுக்கின்றனர்.

NO COMMENTS

Exit mobile version