களுவாஞ்சிக்குடியில் (Kaluwanchikudy) தனியார் பேருந்தில் பணத்தை திருடியதாக நடத்துநர் ஒருவரை
தென்னைமரத்தில் கட்டிவைத்து அடித்து சித்திரவதை செய்த பேருந்து உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (7) முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொருவர்
தலைமறைவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, “களுவாஞ்சிக்குடி மகிளுர் பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளரது
கல்முனை – மட்டக்களப்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவரும் பேருந்தின் உண்டியலில் இருந்த பணம் திருடப்பட்டிருந்தது.
காவல்துறையினருக்கு தெரிவிப்பு
அந்த தனியார் பேருந்தில் ஏற்கனவே கடமையாற்றிய அம்பாறை மத்திய முகாம் பிரதேசத்தைச்
சேர்ந்த 27 வயது நடத்துநரான இளைஞனே குறித்த பணத்தினை திருடியுள்ளதாக சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து குறித்த இளைஞன் நேற்று களுவாஞ்சிக்குடியிலுள்ள சாரதி ஒருவரின் வீட்டுக்கு சென்ற நிலையில் அங்கு சென்ற
தனியார் பேருந்தின் உரிமையாளர் இளைஞனைப் பிடித்துக்கொண்டு
சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பின்னர் ஒந்தாச்சிமடம் பிரதான வீதியிலுள்ள பாழடைந்த காணியில் தென்னை மரம்
ஒன்றில் கட்டிவைத்து கட்டையால் தாக்கி சித்திரவதை செய்துள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு அறிவித்தனர்.
நீதிமன்றில் முன்னிலை
இந்த நிலையில்
சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் சென்றபோது அங்கு யாரும் இல்லாததையடுத்து திரும்பிச் சென்று
இவ்வாறான சம்பவம் இடம்பெறவில்லை என தெரிவித்தனர்.
இதேவேளை தாக்குதல் இடம்பெற்ற போது ஊடகவியலாளர் ஒருவர் எடுத்த காணொளிக் காட்சி
ஊடகங்களில் வெளியானதையடுத்து காவல்துறையினர் தாக்குதல் நடாத்திய பேருந்து உரிமையாளரை
கைது செய்துள்ளனர்.
அத்துடன் கைது செய்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்
தாக்குதலுடன் சம்பந்தப்பட சாரதி தலைமறைவாகியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் மேற்கோண்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.