வடக்கு மாகாண சபையின் ஆயுள் காலத்தில் மருத்துவர்
ப.சத்தியலிங்கம் எந்தவொரு ஊழல் குற்றத்தின் பெயரிலும் பதவி நீக்கம்
செய்யப்படவில்லை என மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுக
நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் மருத்துவர் சி.சிவமோகன் அண்மையில்
வவுனியாவில் வைத்து வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ப.சத்தியலிங்கம்
தொடர்பில் ஒரு பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
விசாரணை அறிக்கை
மருத்துவர் ப.சத்தியலிங்கம் ஊழல் குற்றத்தின் பெயரில் பதவி நீக்கம்
செய்யப்படவில்லை. மாகாண அமைச்சர்களுக்கு எதிரான ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு
சத்தியலிங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமற்றவை எனவும்,
அவரைச் சகல குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விசாரணைக்குழு பூரணமாக
விடுவிப்பதாகவும் எழுத்தில் பரிந்துரைத்துள்ளனர்.
இதனை அந்த விசாரணை
அறிக்கையில் எவரும் எப்போதும் பார்வையிட முடியும்.
அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக, தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம்
கிடைக்காமைக்காகப் பொய்யான குற்றச்சாட்டை மருத்துவர் சிவமோகன்
முன்வைக்கின்றார்” என்றார்.