Home முக்கியச் செய்திகள் சாவகச்சேரி வைத்தியசாலையில் நோயாளிக்கு சிகிச்சை வழங்கப்படாத சர்ச்சை…! மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

சாவகச்சேரி வைத்தியசாலையில் நோயாளிக்கு சிகிச்சை வழங்கப்படாத சர்ச்சை…! மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

0

விஷ ஜந்து கடிக்குள்ளான தனது தந்தையை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு (Chavakachcheri Base Hospital) கொண்டு சென்ற வேளை அங்கு சிகிச்சை வழங்குவதற்கு யாரும் இருக்கவில்லை என நபர் ஒருவர் சமூக வலைதளத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த தகவலை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (Sri Lanka Human Rights Commission) யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்

போதனா வைத்தியசாலையில் சிகிச்சை

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் கடந்த 17.07.2024 அன்று இரவு விஷ ஜந்து கடிக்குள்ளான தனது தந்தையினை சிகிச்சைக்காக கொண்டு சென்ற வேளையில் மருத்துவமனையில் இரவு மருத்துவர்களோ, தாதியர்களோ இருக்கவில்லை.

இந்நிலையில் யாரும் அங்கு இல்லாத காரணத்தினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் செய்திகள் பிரசுரிக்கப்பட்டன.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

செய்தி தொடர்பில் 1996 ஆம் ஆண்டு 21 இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 14 இற்கு அமைய, ஆணைக்குழுவின் சொந்த பிரேரணையாக பதிவுசெய்யப்பட்டு சாவகச்சரி ஆதார வைத்திசாலையின் பதில் மருத்துவ அத்தியட்சகர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ்ப்பாணம், மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வடக்கு மாகாணம் ஆகியோரிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த விளக்க அறிக்கையை எதிர்வரும் 22.07.2024 இற்கு முன் சமர்ப்பிக்க பணிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

சாவகச்சேரி வைத்தியசாலை (Chavakachcheri Base Hospital) நிர்வாகம் தொடர்பில் வைத்தியர் அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியிருந்தன.

இந்த நிலையில், நேற்றையதினம் (18) சாவகச்சேரி நிர்வாகம் தொடர்பில் முகப்புத்தகத்தில் மற்றுமொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாம்பு கடிக்கு ஆளான நிலை

பதிவுடன் சம்பந்தப்பட்ட நபரின் தந்தை பாம்பு கடிக்கு ஆளான நிலையில் இரவு 12.40 மணியளவில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டதாகவும் ஆனால் வைத்தியசாலையில் யாரும் கடமையில் இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், புதிதாக அமைக்கப்பட்ட ஓபிடிக்கு (OPT) அவரது தந்தை கொண்டு செல்லப்பட்டு பார்த்த போதும் அங்கும் யாரும் இருக்கவில்லை என்றும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் அறையிலும் யாரும் இருக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கமரா

அதன் பின்னர் குறித்த நபரின் தந்தை யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு கமராக்களை அவதானிக்குமாறு இந்த பதிவில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த பதிவினை தொடர்ந்து, சாவகச்சேரி வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக பொதுமக்கள் தமது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version