Home இலங்கை சமூகம் செம்மணி மனிதப்புதைகுழியில் அடுத்தடுத்து வெளிவரும் உடலங்கள் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

செம்மணி மனிதப்புதைகுழியில் அடுத்தடுத்து வெளிவரும் உடலங்கள் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

0

யாழ்ப்பாணம் (Jaffna) – செம்மணி பகுதியில் மேலதிகமாக 8 வாரங்கள் அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு நீமதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த பகுதியில் மேலும் மனித புதைகுழிகள் இருக்கலாம் என்பதற்கான சான்றுகள் காணப்படுவதால், மேலும் அகழ்வு பணிகளை மேற்கொள்ள 08 வார கால பகுதி தேவைப்படுவதாக மன்றில் கோரிக்கை முன்வைக்கப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

செம்மணி மனித புதைகுழி தொடர்பான வழக்கு நேற்று (14) யாழ்.நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள்

இதன் போது இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், கடந்த 06ஆம் திகதி வரையில் 32 நாட்கள் முன்னெடுக்ககப்பட்ட நிலையில், தற்போது பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவற்றின் மூன்றாம் பகுதி பணிகள் எதிர்வரும் 22ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், 20ஆம் திகதி மேலும் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள பகுதிகளில் துப்பரவு பணிகள் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

செம்மணியில் மேலும் மனித புதைகுழிகள் இருப்பதற்கான சான்றுகள் காணப்படுவதால், தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ள காலத்திற்கு மேலதிகமாக மேலும் 08 வார கால பகுதி தேவைப்படுவதாக மன்றில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அதற்கான பாதீடுகளை தயாரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மன்று கட்டளையிட்டது.

இதேவேளை கடந்த 06ஆம் திகதி வரையில் கட்டம் கட்டமாக 41 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 147 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் 133 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 18 ஆம் நாள் திருவிழா

NO COMMENTS

Exit mobile version