Home இலங்கை அரசியல் செம்மணி மனிதப் புதைகுழிகள் மனிதப்பேரவலத்தின் உச்சம் : சீமான் ஆதங்கம்

செம்மணி மனிதப் புதைகுழிகள் மனிதப்பேரவலத்தின் உச்சம் : சீமான் ஆதங்கம்

0

செம்மணி மனிதப் புதைகுழிகள் மனிதப்பேரவலத்தின் உச்சம் மட்டுமல்லாது சிங்கள இனவெறியர்களின் தமிழின அழிப்புக்கான மற்றுமொரு வரலாற்றுச் சான்று என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

எக்ஸ் தள பதிவு ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம்

மேலும் தெரிவிக்கையில், ஈழத்தாயகத்தின் வடக்குப் பகுதியில் யாழ்ப்பாணம் செம்மணி – சிந்துபாத்தி இடுகாடு அருகே அண்மையில் குழந்தை உட்பட 5 மனித ஓட்டுத் தொகுதிகள் கண்டறியப்பட்ட மனித புதைகுழி பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவலியையும் தருகிறது.

1996ஆம் ஆண்டு செப்டம்பர் 7 அன்று சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிரிஷாந்தி பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பும் வழியில் யாழ்ப்பாணம் படை முகாமில் இருந்த 11 சிங்கள இராணுவத்தினரால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார்.

அவரைத் தேடிச்சென்ற தாய் ராசம்மா, தம்பி பிரணவன், குடும்ப நண்பர் சிதம்பரம் கிருபாமூர்த்தி ஆகியோரும் கொல்லப்பட்டு நால்வரின் உடலும் அடுத்தநாள் வயல்வெளியில் புதையுண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஈழத்தமிழ் மக்களின் இதயத்தை நொறுக்கிய இக்கொடூர நிகழ்வால், பெரும் மனக்கொந்தளிப்புடன் வீதிகளில் இறங்கி தமிழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பன்னாட்டு அமைப்புகளும், மகளிர் அமைப்புகளும் இலங்கை இனவெறி அரசுக்குக் கொடுத்த அழுத்தம் காரணமாக 7 இராணுவ வீரர்களும், 2 காவலர்களும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர்.

கிருஷாந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, மரண தண்டனையை எதிர்கொண்ட இராணுவ வீரர்களில் ஒருவரான சோமரத்ன ராஜபக்ச இலங்கை நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தின் மூலமாகவே முதன் முதலாக செம்மணி மனித புதைகுழிகள் வெளிச்சத்திற்கு வந்தன. 

உலக நாடுகள் அறிந்துகொள்ள

செம்மணி போன்ற ஏராளமான மனித புதைகுழிகள் ஈழத்தாயகம் முழுவதும் விரவிக்கிடக்கின்றன. அவற்றையெல்லாம் தோண்டி எடுத்து முழுமையாக விசாரித்தால் கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் எத்தனை பெரிய இனப்படுகொலையை தமிழர்கள் மீது இனவெறி இலங்கை அரசாங்கம் நிகழ்த்தி வந்திருக்கிறது என்பதை உலக மானுட சமூகம் அறிய முடியும். 

ஆகவே, இனப்படுகொலை குறித்த விசாரணையை அறிவியல் பூர்வமாக மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டுமென்று ஐ.நா.அவையின் மனித உரிமை ஆணையத்தை வலியுறுத்துகிறேன்.

அதன் மூலம் மட்டுமே இலங்கை அரசாங்கத்தின் சிங்கள இனவெறி எந்த அளவிற்கு உச்சத்தில் இருந்துள்ளது என்பதையும், 2009 ஆம் ஆண்டிற்கு முன்பே தொடர்ச்சியாக, மிகக்கொடூரமாக ஈவு இரக்கமின்றி தமிழர்கள் இலங்கை ஆட்சியாளர்களால் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதையும் உலக நாடுகள் அறிந்துகொள்வதற்கான மறுக்க முடியாத வரலாற்றுச் சான்றாக அவை அமையும்.

தமிழர்களுக்கான தனித்த இறையாண்மை கொண்ட தமிழீழத் தாயகம் அமைவது ஒன்றே நிலைத்த, சரியான தீர்வாக இருக்க முடியும் என்பதை உலகம் உணர்ந்து கொள்ளவும், ஆதரவளிக்கவும் செம்மணி புதைகுழிகள் குறித்த விசாரணை மிக முக்கிய தொடக்கப் புள்ளியாக அமையும் என்பதையும் உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மனித புதைகுழிகள் குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தக்கோரி ஈழத்தமிழ்ச்சொந்தங்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டம் வெல்லட்டும்!

ஈழத்தாயகத்தில் நடைபெறும் நீதிக்கான தொடர் போராட்டங்களுக்கு ஆதரவாக உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் உணர்வுப்பூர்வமாக இணைந்து நிற்கின்றோம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version