மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபை பிரிவில் 13 கோடி ரூபாய் செலவில் போடப்பட்ட
வீதி அபிவிருத்தியில் ஊழல் நடைபெற்றுள்ளதாக தமிழரசுக் கட்சியின்
ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை உறுப்பினர் செ.நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எதிர்வரும் சபை அமர்வில் பிரேரணை ஒன்றை முன்வைக்க உள்ளதாக அவர்
ஊடகங்களுக்கு இன்று(27.06.2025) கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“எமது பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் ஊழல் செயற்பாடுகள் குறித்து
சபையின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தேன்.
பிரேரணை
அதில் மிக முக்கியமாக கடந்த ஏறாவூர் பற்று சபையின் ஆட்சிக் காலம் நிறைவடைந்து
சபை செயலாளரின் அதிகாரத்தில் இருந்த காலத்தில் 13 கோடி ரூபாய் செலவில்
போடப்பட்ட கிரவல் வீதிகளில் ஊழல் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான விசாரணைகள் தற்போது
நடைபெற்று வருகிறது. அதனை எதிர்வரும் சபை அமர்வில் பிரேரணையாக கொண்டுவந்து
விசாரணைகள் நடாத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளேன்.
நேரம் போதாமை, மற்றும்
இன்றைய நிகழ்ச்சி நிரலில் குறித்த விடயம் உள்வாங்கப்படாத நிலையில், அது
குறித்து முழுமையாக சபையில் உரையாற்ற முடியவில்லை. இருந்தும் இது குறித்து இன்று ஊடகங்களின் கவனத்திற்கு கொண்டு
வந்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
