ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியற்றவர் என அறிவிக்குமாறு கோரி நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி ஒருவரினால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த சட்டத்தரணி ஷான் ரணசூரிய என்பவர் சட்டத்தரணி ஜயமுதிதா ஜயசூரிய ஊடாக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் உயர் நீதிமன்றின் உத்தரவுகளுக்கு அமைய செயற்படவில்லை எனவும், அதனால் அவர் இலங்கை அரசியல் அமைப்பை மீறி உள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனவே அவர் வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியற்றவர் என இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் பெயரிடல்
இந்த மனுவின் பிரதிவாதியாக ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்கவும் சட்டமா அதிபரும் பெயரிடப்பட்டுள்ளனர்.
அரசியல் சாசனத்தின் 35 (3) பிரிவிற்கு அமைய ஜனாதிபதிக்கு பதிலாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 24 ஆம் திகதி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்று ஜனாதிபதியினால் உதாசீனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் 24 ஆம் திகதி உயர் உயர்நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவைக்கு அமைய சிரேஸ்ட பிரதி பொலிஸ் அதிபர்களில் ஒருவரை பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்க உத்தரவிடுமாறு நீதிமன்றிடம் அவர் கோரியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறி உள்ளதாக மனுவில் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு நிலைமை
நாட்டில் நிலவிவரும் பாதுகாப்பு நிலைமைகளுக்கு அமைய மக்களின் சொத்துக்களை பாதுகாப்பதற்காக உரிய அதிகாரியை நியமிக்காமல் செயல்பட்டமை ஏற்புடையதல்ல என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் காரணமாக நியமனங்களை மேற்கொள்ள முடியாது என குறிப்பிடும் ரணில் விக்ரமசிங்க நீதி அமைச்சராக அலி சப்ரியை நியமித்து உள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.