மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு (R.Shanakiyan) முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனை (Sivanesathurai Chandrakanthan) 50,000 ரூபா வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்கிசை மாவட்ட நீதிமன்றம் இன்று (23) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், தன்னை அவமதிக்கும் வகையில் இரா. சாணக்கியன் கருத்து வெளியிட்டதாக கூறி அவருக்கு எதிராக கல்கிசை மாவட்ட
நீதிமன்றத்தில் பிள்ளையான் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இவ்வழக்கு தொடர்பில், இன்று சாணக்கியன் கல்கிசை
மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலையாகிய போது அவரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி
சுமந்திரனும் முன்னிலையானார். எனினும் குறித்த வழக்கைத் தாக்கல் செய்த பிள்ளையான் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
இதன்போது, எதிர்மறை தரப்பின் சட்டத்தரணி சுமந்திரன், இவ்வழக்கை
விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இந்த நீதிமன்றத்துக்கு உடைமையாக்கும் அதிகாரம்
இல்லை என்ற வாதத்தை முன்வைத்தார்.
அத்துடன் வழக்கு விசாரணைக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் கோப்புக்கள் சமர்ப்பிக்கப்படாத
காரணத்தால், வழக்குத் தாக்கல் செய்த பிள்ளையானுக்கு,
வழக்கு செலவீனமாக எதிர்த்தரப்புக்கு 50,000 ரூபாவினை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் குறித்த வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 22 ஆம்
திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/Ovh3fChzZ84