எங்களை அழிப்பதற்கு சிங்களவர்கள் தேவையில்லை, எமது தலைவர்களே போதும் என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் அமைப்பின் பிரதிநிதியான அன்னலிங்கம் அன்னராசா
தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்றையதினம் (01.09.2024) நிறைவேற்றப்பட்ட தமிழரசுக் கட்சியின் தீர்மானம்
குறித்து வினவியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும்
குறிப்பிடுகையில்,
2009ஆம் ஆண்டுக்கு பிற்பாடு இன்று வரை தமிழரசுக் கட்சி தமிழருடைய
உரிமைகளை மீட்பதற்கு உளரீதியாக செயற்படவில்லை. வாய் ரீதியாக மக்களுக்கு ஒன்றை
சொல்வதும் அரசாங்கத்திற்கு ஒன்றை சொல்வதுமாக இருக்கின்றது.
தமிழர் சமூகமாக ஒன்றுபடல்
ஒட்டுமொத்த கட்சியாக இந்த முடிவை எடுத்திருந்தால் நாங்கள் வரவேற்றிருப்போம்.
ஆனால் கட்சியின் தலைவர் ஒன்றினை கூறுகின்றார். ஜனாதிபதி சட்டத்தரணி
கே.வி.தவராசா ஒன்றினை கூறுகின்றார். அத்துடன், பல உறுப்பினர்கள் இதில்
கலந்துகொள்ளவில்லை.
ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் தமிழ் மக்களின்
ஒற்றுமையையும், ஐக்கியத்தையும் குலைப்பதற்கான அடித்தளமாகத் தான் நாங்கள் இதனை
பார்க்கின்றோம்.
தமிழரசுக் கட்சியை எடுத்து பார்ப்போமேயானால் சிவஞானம் சிறீதரன், குகதாசன்
ஆகியோர் உட்பட்ட கிளிநொச்சி மற்றும் திருகோணமலை கிளைகளினால் தமிழ் பொது
வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர்
அதனை எதிர்க்கின்றனர். இவ்வாறு இருந்தால் தமிழர்களுடைய நிலை என்ன?
தமிழர்களை கூறு போட்டு, தமிழர்களுடைய இருப்புகளை அழிப்பதற்கு ரணிலோ, சஜித்தோ,
அனுரவோ அல்லது நாமல் ராஜபக்சவோ தேவையில்லை. எமது கட்சித் தலைவர்களே போதும்.
தமிழ் சிவில் சமூகமாக நாங்கள் எடுத்த பொது வேட்பாளர் என்ற முயற்சியை ஆதரித்து,
எதிர்காலத்தில் இவ்வாறான புல்லுருவிகளையும், முண்டு கொடுப்பவர்களையும்
நிராகரிப்பதற்கு நாங்கள் தமிழர் சமூகமாக ஒன்றுபட வேண்டும்.
எமக்கான தீர்வு
வாக்களிப்பது மக்களாகிய நாங்கள். ஆனால், இவர்கள் எப்போது மக்களை சந்தித்து,
மக்களின் கருத்துக்களை கேட்டு தீர்மானம் எடுத்தார்கள்? ஆகவே, இவர்கள் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறி எவ்வாறு சர்வதேச சமூகங்களிடம் பேசப் போகின்றார்கள்?
வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் கூட்டமானது பிரிவினையை
காட்டுகின்றது.
எனவே, மக்கள் இந்த தமிழரசுக் கட்சியை நம்பக் கூடாது.
நாங்கள் சுயமாக சிந்தித்து, எங்களுக்கு இருக்கும் வாக்குரிமை பலத்தினால்
ஒன்றிணைந்து செயற்படுவோம். எமது கட்டமைப்புக்குள் வருமாறு நாங்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியையும் அழைக்கின்றோம்.
தங்களுடைய சுயலாபத்துக்காகவும், தங்களது மதுபான நிலைய அனுமதிப்
பத்திரத்துக்காகவும், தாங்கள் கோடிகளை சம்பாதிப்பதற்காகவும் தமிழ் மக்களை
எதிர்காலத்தில் விற்றுப் பிழைப்பது சாத்தியமற்றது. 21ஆம் திகதி ஜனாதிபதி
தேர்தலுக்கு பின்னர் அது வெளிச்சத்துக்கு வரும்.
அப்பொழுது இந்த அரசியல்
காட்சிகளும், பேரம் பேசுபவர்களும் புரிந்து கொள்வார்கள். இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு சங்கு
சின்னத்திற்கு வாக்களிப்போம், எமது ஒற்றுமையை நிலைநாட்டுவோம் அதுவே எமக்கான
தீர்வு” என தெரிவித்துள்ளார்.