இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) மத்திய குழுவில் எடுக்கப்பட்ட முடிவானது எமது
மக்களுக்கு ஏற்புடையது அல்ல என அக்கட்சியின் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட முன்னாள் கிழக்கு மாகாண
சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்துள்ளார்
களுவாஞ்சிகுடியில் இன்று (03.09.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “இவ்விடையம் தொடர்பில் வட்டாரங்களிலுள்ள மக்கள்
புத்திஜீவிகள், கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் எம்மை அடிக்கடி தொடர்பு
கொண்டு ஏன் இவ்வாறான முடிவை எடுத்தீர்கள், கட்சி ஏன் இவ்வாறான முடிவுக்குச்
செல்ல வேண்டும்.
தமிழ் பொது வேட்பாளர்
தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில்
போட்டியிடுகின்றபோது சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு ஏன் வாக்களிக்கத் தூண்ட
வேண்டும். என்ன அடிப்படையில் கட்சின் இந்த முடிவை எடுத்துள்ளது போன்ற
கேள்விகளை கேட்கின்றார்கள்.
அதற்கு பதிலளிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில்
உள்ளேன். அனேகமான மக்கள் கட்சியின் முடிவை ஏற்றுக் கொள்வதாக இல்லை.
எமது மக்கள் பொது வேட்பாளர் தொடர்பில் அவரை நூறுவீதம் ஆதரிக்க வேண்டும் என்ற
செயற்பாட்டில் இருக்கின்றார்கள். இந்நிலையில் எமது கட்சி அங்கத்தவர்கள்
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு (Sajith Premadasa) ஏன் வீடு வீடாகச் சென்று
வாக்குச் சேகரிக்க வேண்டும் என்பதை கட்சி மக்களுக்குத் தெழிவுபடுத்த வேண்டிய
கடப்பாடு உள்ளது.
மாறாக அவ்வாறு எமது கட்சியைச் சேர்ந்தவர்கள் வீடு வீடாகச்
சென்று சஜித் பிரேமதாச வீடு வீடாகச் சென்று வாக்குச்
சேகரிப்பார்களா என்பது கேள்விக்குறியாகும்.
தமிழரசுக் கட்சி
மக்களுக்காகத்தான் நாங்கள், எங்களுக்காக மக்கள் இல்லை. எனவே எம்மவர்களின்
முடிவின் பிரகாரம் சஜித் பிரேமதாச பாவம். இலங்கைத் தமிழரசுக் கட்சி,
முஸ்லிம் காங்கிரஸ் போன்ற சிறுபான்மைக் கட்சிகள் அவருடன் இணைவதால்
பெரும்பான்மை சமூகம் ஒரு மாற்று நடவடிக்கை எடுப்பதற்குரிய வசதி
ஏற்படுத்தப்படும்.
அதனடிப்படையில் இது சஜித் பிரேமதாசவை தோற்கடிக்கும் ஒரு
வியூகமாகவும் இருக்கலாம். ஏனெனில் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தந்திரத்தில்
சாத்தியவான் இவ்வாறான திட்டத்தை வகித்திருக்கலாம்.
அதற்கு இவர்களும்
துணைபோயிருக்கலாம் என்பதை என்னால் ஊகிக்க முடிகின்றது. ஏனெனில் சஜித்
பிரேமதாசவுக்கு என்ன காரணத்திற்காக வாக்களிக்க வேண்டும் என்பதை இற்றைவரையில் யாரும் எந்த ஊடகத்திலும் சொல்லவில்லை.
எது எவ்வாறு அமைந்தாலும் எமது கட்சியைச் சேர்ந்த இரண்டு முறை பாராளுமன்ற
உறுப்பினராக இருந்து தமிழ் தேசியத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கும்
பா.அரியநேத்திரன் (P. Ariyanethiran) சங்கு சின்னத்திற்கு மக்கள் அனைவரும் இம்முறை
வாக்களித்து தமிழ் மக்களின் ஒன்றுமையை நிருபிக்க வேண்டும்.” என்றார்.