தேசிய மக்கள் கட்சியின்(npp) ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayaka) தெரிவித்தது போன்று இலங்கை சுங்கத்திற்கு 1.1 இலட்சம் கோடி ரூபா பற்றாக்குறை இல்லை எனவும், அறவிடப்பட வேண்டிய வரித் தொகை 58 பில்லியன் ரூபா மாத்திரமே எனவும் இலங்கை சுங்கம்(sri lanka customs) தெரிவித்துள்ளது.
ஒரு தனியார் நிறுவனத்தைத் தவிர, மீதமுள்ள வரிகள் 37 அரச நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கப்பட உள்ளதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் இலங்கை சுங்கத்தின் எதிர்பார்க்கப்படும் வருமான இலக்காக 1534 பில்லியன் ரூபாவை சர்வதேச நாணய நிதியம் உறுதிப்படுத்தியுள்ளது.
வருமான இலக்கை அடைந்த சுங்கத் திணைக்களம்
ஆனால் 2024 ஆம் ஆண்டின் முதல் 08 மாதங்களின் இறுதிக்குள், இலங்கை சுங்கம் 1000 பில்லியன் ரூபா வருமான இலக்கை அடைய முடிந்தது, இது வரலாற்றில் அதிகூடிய வருமானம் மற்றும் வருடத்தின் விரும்பிய இலக்கை அடுத்த 04 மாதங்களில் அடைய முடியும் என சுங்கப் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ்மஹ்தா தெரிவித்தார்.
இலங்கை சுங்கத்திற்கு 1.1 ட்ரில்லியன் ரூபா வரி நிலுவை
இலங்கை சுங்கத்துறை இதற்கு முன்னர் 2023 இல் வரலாற்றில் அதிக வருமானத்தைப் பெற்றிருந்தது. அந்த வருடத்தின் மொத்த சுங்க வருமானம் 975 பில்லியன் ரூபா என்றும் சரத் நோனிஸ் சுட்டிக்காட்டுகிறார்.
இலங்கை சுங்கத்திற்கு 1.1 ட்ரில்லியன் ரூபா வரி நிலுவை உள்ளதாக தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தெரிவித்தார்.