Home இலங்கை அரசியல் அரியநேத்திரனுக்கு நன்றி தெரிவித்த விக்னேஸ்வரன்

அரியநேத்திரனுக்கு நன்றி தெரிவித்த விக்னேஸ்வரன்

0

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிட்ட
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரனுக்கு எனது
இதயபூர்வமான நன்றிகளை தமிழ் மக்கள் சார்பாகவும் தமிழ் மக்கள் கூட்டணி
சார்பாகவும் தெரிவித்துக்கொள்கின்றேன், என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எந்தவிதமான சுயநலனும் இல்லாமல் தமிழ் தேசிய எழுச்சியின்பால் கொண்ட
பற்றுறுதியின் காரணமாக அரியநேத்திரன், இந்த தேர்தலில்
போட்டியிட முன்வந்தமை தமிழ் மக்களின் மத்தியில் அரசியல் ரீதியான ஒரு
விழிப்புணர்வினையும் அணிதிரட்டலையும் ஏற்படுத்தியிருக்கின்றது என்பதில்
எந்தவிதமான சந்தேகமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

ஜனாதிபதி தேர்தல் 

“பொதுக்கட்டமைப்பின் அழைப்பை ஏற்று மிகவும் குறுகிய ஒரு காலப்பகுதியில்
எந்தவிதமான முன் ஆயத்தங்களும் இல்லாமல் இந்த ஜனாதிபதி தேர்தலில்
போட்டியிட்ட அவர் எந்தவிதமான சலிப்பையோ, தயக்கத்தையோ அல்லது
சோர்வினையோ வெளிக்காட்டாமல் ஒரு இளைஞர் போன்று வடக்கு மற்றும் கிழக்கு
மாகாணங்களின் மூலை முடுக்குகள் எல்லாம் பயணம் செய்து தமிழ் மக்களை
அணிதிரட்டுவதற்கு பாடுபட்டிருந்தார்.

அவரின் இந்த அர்ப்பணிப்பும் கடின
உழைப்பும் என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது. நியமன தினத்தன்று நான்
மருத்துவமனையில் இருந்து வந்து அவருடன் கூடியிருந்ததை ஒரு பாக்கியமாகக்
கருதுகின்றேன்.

அவரின் கட்டுப் பணத்தை எமது கட்சி சார்பாக உரிய இடத்தில் கையளித்திருந்தோம். தனது சொந்த கட்சிக்குள் இருந்த எதிர்ப்புக்கள், குத்து வெட்டுக்கள் மற்றும் தனது
அரசியல் எதிர்காலத்துக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய ஆபத்தையும் பொருட்படுத்தாமல்
இந்த தேர்தலில் மிகவும் துணிச்சலாக போட்டியிட்டு வடக்கு மற்றும் கிழக்கு
மாகாணங்களின் ஒற்றுமை ஒன்றிணைவின் குறியீடாக அவர் மிளிர்ந்ததை நான்
வரவேற்றுப் பாராட்டுகின்றேன்.

அரியநேத்திரனின் தமிழ் மக்களுக்கான அரசியல் சேவை தொடரவேண்டும்
என்றும் அது தமிழ் மக்களுக்கு இன்றைய காலகட்டத்தில் அவசியம் என்பதையும்
நான் இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பிடவிரும்புகின்றேன்.

அதேபோல, தமிழ் தேசியத்தை நேசித்து அதனை பலப்படுத்தும் வகையில் அரியநேத்திரனுக்கு வாக்களித்த அத்தனை தமிழ் மக்களுக்கும் எனது
நன்றிகளை இத்தருணத்தில் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்” என  தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version