Home இலங்கை அரசியல் நுவரெலிய மாவட்டத்தில் நீர்ப்பாசன கட்டமைப்பிற்கு சேதம்.. புனரமைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் கவனம்

நுவரெலிய மாவட்டத்தில் நீர்ப்பாசன கட்டமைப்பிற்கு சேதம்.. புனரமைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் கவனம்

0

கிரகரி வாவியின் கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப சேவை வழங்கும் பொறுப்பை
நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். 

நுவரெலியா மாவட்டத்தில் நீர்ப்பாசனக் கட்டமைப்பிற்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில்
நுவரெலிய மாவட்ட செயலகத்தில் நேற்று (08) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்
குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சம்பந்தப்பட்ட
அதிகாரிகளுக்கிடையில் கலந்துரையாடப்பட்டது.

சீரற்ற காலநிலையினால் கொத்மலை நீர்த்தேக்கம் தொடர்பாக நாட்டில் பரவலாகப்
பேசப்படும் கருத்துக்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஜனாதிபதி
கேட்டறிந்தார். கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு கடந்த 27 ஆம் திகதி வரலாற்றில்
மிக அதிக அளவு நீர் கிடைத்ததாகவும், கொத்மலை அணையைப் பாதுகாக்கும் நோக்கில்
வழமையான முறைப்படி அறிவியல் பூர்வமாக வான்கதவுகள் திறக்கப்பட்டதாகவும்
அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

நுவரெலியா மாவட்டத்தில் 4700 ஏக்கர் நெல் வயல்கள் சேதமடைந்துள்ளதாகவும், அதில்
500 ஏக்கர் வயல் நிலங்கள் தவிர, ஏனைய நெல் வயல் நிலங்களில் பெரும்போகத்தில்
பயிற்செய்கை மேற்கொள்ள முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கான காரணங்கள் குறித்து
இதன்போது ஜனாதிபதி ஆராய்ந்தார்.

 முக்கிய கலந்துரையாடல் 

சட்டவிரோதக் கட்டிடங்கள், கால்வாய்கள்
குறுகியதாக மாறியிருப்பது மற்றும் கிரகரி வாவியின் மதகை அகலமாக்காமை என்பனவே
இதற்குக் காரணமாக அமைந்ததாக அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர்.

இதற்குத்
தீர்வாக, கிரகரி வாவியின் கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப சேவைகளை
நீர்ப்பாசன திணைக்களத்திற்கு ஒப்படைக்கவும் பொருளாதார செயற்பாடுகளை நகர
சபையின் கீழ் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார
திசாநாயக்க, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

நுவரெலியாவில் சேதமடைந்த வீதிகளை உடன் புனரமைக்க ஜனாதிபதி அறிவுறுத்தல்.

நுவரெலியா மாவட்டத்தில் சேதமடைந்த வீதிகள், வடிகாண்கள் மற்றும் பாதுகாப்பு
மதில் சுவர்களை புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை
மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பொறுப்பான அதிகாரிகளுக்கு
அறிவுறுத்தியுள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் வீதிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை ஆராய்வது மற்றும்
அதற்காக மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளுடன் நேற்று (08.12.2025) காலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இவ்வாண்டு இறுதிக்குள் அனைத்து புனரமைப்பு நடவடிக்கைகளையும் நிறைவு
செய்யுமாறும் இதன்போது ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

டித்வா சூறாவளியால் நுவரெலியா மாவட்டத்தில் சேதமடைந்த அனைத்து வீதிகள் மற்றும்
அவற்றை புனரமைக்க எடுக்கும் காலம் தொடர்பில் ஆராயப்பட்ட போது இந்த தீர்மானம்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாதாரண பழுதுபார்ப்பு மேற்கொண்டு திறக்க முடியாத வீதிகள் தொடர்பில்
அதிகாரிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்த ஜனாதிபதி, இது தொடர்பாக அறிக்கையை
வழங்குமாறு அதிகாரிகளிடம் கோரினார்.

நுவரெலியா மாவட்டத்தில் சில வீதிகள் மற்றும் பாலங்களை அமைக்கும் போது தேசிய
கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கைகளை கவனத்திற் கொள்ள வேண்டும் என்றும்
அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது, 

NO COMMENTS

Exit mobile version