Home இலங்கை அரசியல் சுயநல அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழித்த தயாசிறி: பாரத் அருள்சாமி கருத்து

சுயநல அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழித்த தயாசிறி: பாரத் அருள்சாமி கருத்து

0

கண்டி (Kandy) மாவட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரின் டீல் அரசியலை நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர (Dayasiri Jayasekara) அம்பலப்படுத்தியுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பாரத் அருள்சாமி (Barath Arulsamy) தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickramasinghe) திரைக்கு முன்னால் விமர்சித்து விட்டு
திரைக்குப் பின்னால் பணத்தைப் பெற்றுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின்
பெயர் பட்டியலை தயாசிறி ஜெயசேகர சமர்ப்பித்து இருந்தார்.

இதில் வியக்க வைக்கும் முகமாக தற்போதைய அரசாங்கத்தையும் ஜனாதிபதியும்
விமர்சித்து பிழைப்பு நடத்தும் கண்டி மாவட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரின்
பெயரும் இடம்பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொருளாதார ஸ்திரத்தன்மை

நாடு பொருளாதார சிக்கலில் வீழ்ந்திருந்த போது, இந்த மக்களுக்காக இந்த நாட்டை
மீட்டெடுக்க ரணில் விக்ரமசிங்க பல புரட்சிகரமான நடவடிக்கைகளை
மேற்கொண்டது மட்டுமல்லாமல் எமது வெளிநாட்டு கொள்கைகளை சாணக்கியமாக பயன்படுத்தி
சர்வதேச நிதி நிறுவனங்களின் உதவிகளைப் பெற்று நாட்டின் பொருளாதார
ஸ்திரத்தன்மைக்கு பெரும் பங்காற்றி வருகிறார்.

அவரின் இந்த கடினமான பயணத்திற்கு தோள் கொடுக்கும் முகமாக இலங்கை தொழிலாளர்
காங்கிரஸ் மக்கள் நலன் கருதி நாட்டின் பொருளாதாரத்தை முன்னிருத்தி அவருக்கு
நேரடியான ஆதரவை வழங்கியது.

ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கைகள்
மற்றும் அண்மையில் கொண்டுவரப்பட்ட சட்டமூலங்கள் எமது இளைய சமுதாயம்
எதிர்பார்த்த பொறுப்பு கூறல் மற்றும் வலுவான கொள்கைகளை உருவாக்குதல் போன்ற
கோரிக்கைகளையும் நிறைவேற்றி வருகின்றது. 

இவ்வாறான அனைத்து நடவடிக்கைகளையும் விமர்சித்து ஜனாதிபதியின் பொருளாதாரக்
கொள்கைகளை மரண சாசனமாக விமர்சித்த வேலுகுமார், காலையில் சஜித் வாழ்க
என்று கோஷம் எழுப்பி விட்டு இரவில் ரணில் விக்ரமசிங்கவிடம் தஞ்சம்
புகுந்து பணம் பெற்றுக் கொண்டிருப்பது மிக வேடிக்கையாக உள்ளது.

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் என்றும் ஒரு கொள்கையோடு
அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுபவர் ஆவார். ஆனால், அவரின் கட்சி பிரதிநிதியோ
அவருக்கே தெரிந்தோ தெரியாமலோ இவ்வாறான செயலில் ஈடுபட்டிருப்பது எவ்வாறு
ஏற்றுக் கொள்ளப்போகிறார் என்பதை மக்கள் கூர்ந்து அவதானித்து வருகிறார்கள்.

முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள்

தயாசிறி ஜெயசேகர சபையில் இப்பட்டியலை வெளியிட்டபோது
முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் இதில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

உடனே அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஃப் ஹக்கீம் அவர்கள்
அவ்வாறு கட்சிக்குத் தெரியாமல் இவ் நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தால் அவர்கள்
மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்க தயங்க போவதில்லை என கூறினார்.

அண்மையில் கண்டியில் புதிய மதுபானசாலைகளை கண்டி மாவட்ட தமிழ் நாடாளுமன்ற
உறுப்பினர் பெற்றுக் கொண்டுள்ளதாக பௌத்தப்பிக்குகள் ஊடகங்களுக்கு
தெரிவித்திருந்தனர்.

அது மக்கள் மனதில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்ததுடன் தற்போது
ஜனாதிபதியிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டிருப்பதும் பௌத்தப்பிக்குகளின்
சந்தேகத்திற்கும் ஒற்றுமையுள்ளதாக கருதப்பட வேண்டியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version