முழு நாடும் எதிர்நோக்கும் தேர்தல் ஜனாதிபதித் தேர்தல் எனவும் தற்போது எவரும் வாக்கெடுப்பு கோரவில்லை எனவும் சுதந்திர மக்கள் பேரவையின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் ஆரம்பம் முதலே தந்திரோபாயங்களை கையாண்டு வருவதாகவும் உத்தேச 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமே அதன் இறுதித் துருப்புச் சீட்டாகும் என குறிப்பிட்டார்.
22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம்
உத்தேச 22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் வர்த்தமானியில் வெளியிடப்படாது என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச அறிவித்திருந்த நிலையில், ஜனாதிபதி அதற்கு எதிராகச் சென்று வர்த்தமானியில் பிரகடனப்படுத்தியமை அமைச்சரவையின் ஒற்றுமைக்கு விழுந்த மரண அடி என்று அவர் கூறினார்.
நடைமுறைச் சாத்தியமற்றது
தேர்தல்கள் ஆணைக்குழுவின் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைக் கொண்டு ஒரே காலப்பகுதியில் சர்வஜன வாக்கெடுப்பு மற்றும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது நடைமுறைச் சாத்தியமற்றது எனவும், தனிநபரின் குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக பொதுப் பணத்தை வீணடிப்பது பாவம் எனவும் பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.