வடக்கு மற்றும் கிழக்கில் கண்ணிவெடி அகற்றுவது ஒரு தேசிய தேவை என பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை திட்டத்தின் நிகழ்வொன்றில கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட பிரதமர், “மோதல்களுக்குப் பிறகு எழுந்த ஒரு தேவை என்றாலும், கண்ணிவெடி அகற்றல் என்பது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயம்.
உள்ளூர் பொருளாதாரம்
இந்த செயல்முறை பௌதீக ஆபத்துகளை அகற்றுவது மட்டுமல்லாமல், மக்களின் கண்ணியம், வாழ்வாதாரம் மற்றும் அமைதியான எதிர்காலத்தை மீட்டெடுப்பது பற்றியதாகும்.
பாடசாலைகளை மீண்டும் திறக்கவும், குழந்தைகள் பாதுகாப்பாக விளையாடவும், விவசாயிகள் அச்சமின்றி தங்கள் நிலங்களுக்குத் திரும்பவும், மக்கள் மீண்டும் கட்டியெழுப்பவும் கண்ணிவெடிகளை அகற்றுவது முக்கியம்.
அரசாங்கத்தின் வளர்ச்சி தொலைநோக்கு அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்குவதாகும், கல்வி, சுகாதாரம், தகவல் மேலாண்மை, சமூக நலன் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்காக இந்த செயல்முறையை விரைவுபடுத்துவது முக்கியம்.
முன்னர் வளர்ச்சி செயல்முறை மற்றும் மனித நடவடிக்கைகளில் இருந்து விலக்கப்பட்டிருந்த இந்தப் பகுதிகளை கண்ணிவெடிகளை அகற்றுவது, எதிர்கால சந்ததியினருக்கு அவற்றைப் பாதுகாக்கவும், விவசாயம் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உருவாக்கவும் ஒரு வாய்ப்பை வழங்கும்.
சர்வதேச ஆதரவு
வடக்கு மற்றும் கிழக்கில் சுமார் 23 சதுர கிலோமீட்டர் நிலம் கண்ணிவெடிகள் காரணமாக பொதுமக்களால் பயன்படுத்த முடியாததாக உள்ளது. எனவே, கண்ணிவெடிகள் உள்ள பகுதிகளை விரைவில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடியதாக மாற்ற வேண்டும்.
2028 ஜூன் 1ஆந் திகதிக்கு முன்னர் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான ஒப்பந்தத்தின் பிரிவு 5 இன் கீழ் உள்ள கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது.” என்றார்.
அத்தோடு, ஒவ்வொரு கண்ணிவெடியையும் அகற்றுவது மக்களின் நன்மைக்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் மிகவும் முக்கியமானது என்றும், எனவே, சர்வதேச சமூகத்திடமிருந்து தொடர்ந்து ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் ஹரிணி வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிகழ்வில், தேசிய கண்ணிவெடி அகற்றல் செயற்பாட்டு மையத்தின் (NMAC) இணையத்தளம் திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
