வடக்கு கடற்பரப்பில் தற்போது அதிகரித்துள்ள இந்திய இழுவைப்படகுகளின்
அத்துமீறல் செயற்பாடுகளை உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம், இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின்
வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் குறித்த இந்திய இழுவைப்படகுகளின் எல்லைதாண்டிய அத்துமீறல்
செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் தாம்மால் கவனஞ்செலுத்தப்படுமென
ஜனாதிபதி இதன்போது பதிலளித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற அனர்த்தப் பாதிப்புத் தொடர்பான கலந்துரையாடலின் போது இவ்விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கடுமையான பாதிப்பு
இக்கலந்துரையாடலில் இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்
மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
வடமாகாணத்தின் முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி
மாவட்டங்களிலுள்ள மீனவர்கள் இந்திய இழுவைப்படகுகளால் கடுமையான பாதிப்புக்களை
எதிர்நோக்குகின்றனர்.
வடபகுதி கடற்பரப்பு முழுவதும் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்
செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றன.
இதனால் வடபகுதியைச் சேர்ந்த
எமது மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட முடியாத நிலை ஏற்படுகின்றது.
எனவே ஜனாதிபதி என்ற வகையில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்
செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதுதொடர்பில் தாங்களே நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வடமாகாணத்திலுள்ள நான்கு கரையோர மாவட்டங்களும் இந்த இந்திய இழுவைப்படகுகளின்
அத்துமீறலால் பாதிக்கப்படுவதுடன், தீவுப்பகுதிகள் மிகமோசமாகப்
பாதிக்கப்படுகின்றன.
குறிப்பாக இந்திய இழுவைப்படகுகள் தமது கடற்பரப்பின் எல்லைகளைத் தாண்டி எமது
கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுளைவதுடன், எமது கடற்கரையை அண்மித்து தமது
கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
இழுவைப்படகுகளின் அத்துமீறல்
தங்களுக்கு இந்த விடயத்தினைக் கையாள்வதில் இராஜதந்திர ரீதியாக சிக்கல்கள்
இருக்கலாம். இருப்பினும் இந்த விடயம் தொடர்பில் கவனஞ்செலுத்தி இந்திய
இழுவைப்படகுகளின் அத்துமீறலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு
ஜனாதிபதியிடம், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தினார்.
இதன்போது மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப்பணிப்பாளரும்
இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகளுக்கு எதிராக கருத்துத்
தெரிவித்தார்.
இந்நிலையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இதன்போது கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த விவகாரம் பூகோளரீதியான ஒரு பிரச்சினை என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.
இந்தியாவில் தேர்தல் ஒன்று நெருங்கிவரும்போது இந்தவிவகாரம் ஒரு பாரிய
பிரச்சினையாகத் தலைதூக்கும். அதேபோல் நமது நாட்டிலும் ஒரு தேர்தல் ஒன்று
நெருங்கிவரும்போது இந்த பிரச்சினை பாரிய பிரச்சினையாக மாறும்.
இந்தப் பிரச்சினை இருநாடுகளுக்கிடையிலான பிரச்சினை.
இருப்பினும் இந்திய
இழுவைப்படகுகள் எமது எல்லைக்குள் நுழைவதை நாமே தடுக்கவேண்டும். எமது
கடற்பரப்பிற்குள் அயல் நாட்டவர்கள் நுழையாமல் பார்கவேண்டியது எமது கடமை.
இது
எமது உரிமைசார்ந்த பிரச்சினையுமாகும்.
இவ்வாறு இந்திய இழுவைப்படகுகள் எல்லை தாண்டி வருவதுதொடர்பில் எமது
பாதுகாப்புத் தரப்பினர், குறிப்பாக கடற்படையினர் ஏற்கனவேயும் நடவடிக்கைகளை
மேற்கொண்டுள்ளனர்.
எனினும் தொடர்ந்தும் இவ்வாறான இந்திய மீனவர்களின் எல்லைதாண்டிய செயற்பாடுகள்
இடம்பெறுகின்றன.
இந்நிலையில் கடந்த 12.12.2025 யாழ்ப்பாணத்தில் இந்த எல்லை தாண்டிய இந்திய
இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகளுக்கெதிராக மீனவர்களும்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததையும் நான் அறிவேன்.
எனவே இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் – என்றார்.
