Home முக்கியச் செய்திகள் தமிழர் பகுதியில் நிறுவப்படவுள்ள அதானியின் காற்றாலை மின் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு!

தமிழர் பகுதியில் நிறுவப்படவுள்ள அதானியின் காற்றாலை மின் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு!

0

இந்தியாவின் அதானி நிறுவனத்தால் தமிழர் தாயகப்பகுதியில் நிறுவப்பட இருந்த காற்றாலை மின் திட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மன்னார் – பூநகரி ஆகிய இரண்டு இடங்களில் இரண்டு பாரிய காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்கள் அமைக்கப்பட இருந்தன.

தற்போது அனுமதி வழங்க முடியாது

இந்த நிலையிலேயே குறித்த மின்னுற்பத்தி திட்டங்களுக்கு தற்போது அனுமதி வழங்க முடியாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த திட்டத்திற்கான மதிப்பீடு மற்றும் அவற்றின் ஊடாக சூழலுக்கு ஏற்படக் கூடிய தாக்கம் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் வழங்கப்பட்ட உரிமத்தின் விபரங்கள் உள்ளிட்டவற்றின் மேலதிகத் தகவல்களை சமர்ப்பிக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த மின்னுற்பத்தி திட்டங்களுக்கு இலங்கை முதலீட்டுச் சபை கடந்த பெப்ரவரி 23ஆம் திகதி அனுமதி கடிதத்தை வழங்கியிருந்தது.

350 மெகாவோட் மின்சாரம்

இந்த திட்டமானது 442 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுடன் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், இதனூடாக 350 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பில் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பூநகரி மற்றும் மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதற்கு மேலும் பல தகவல்கள் அவசியமாக உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை மன்னார் பகுதியில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின்திட்டத்திற்கு அம்மாவட்ட மக்கள் தொடர்ச்சியாக தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version