தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பதுளை (Badulla) மாவட்டத்தில் இருந்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் குழுவினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் வெளியான மூன்று கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம்
அத்துடன், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya), குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் (CID) பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட விசாரணை அறிக்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு ( Human Rights Commission Of Sri Lanka) சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நேற்று (21.10.2024) ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான தமது பரிந்துரைகளை விரைவில் முன்வைக்கவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கையை ஆராய்ந்ததன் பின்னர் தமது ஆணைக்குழுவின் பரிந்துரைகளை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கவுள்ளதாக ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டார்.