Home இலங்கை அரசியல் இலங்கையின் தரவுக் கட்டமைப்பை இந்தியாவுக்கு வழங்க முயற்சி : விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

இலங்கையின் தரவுக் கட்டமைப்பை இந்தியாவுக்கு வழங்க முயற்சி : விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

0

இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தின் (Department for registration of persons) தரவு கட்டமைப்புக்களை இந்தியாவுக்கு (India) வழங்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றதாக எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்

இதேவேளை இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சரின் விஜயத்தின் உண்மை நோக்கமென்ன என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று (20) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜெய்சங்கரின் இலங்கை விஜயம்

அவர் மேலும் உரையாற்றியதாவது, “இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் (Dr. S. Jaishankar) இன்று நாட்டுக்கு வருகை தந்துள்ளார்.

மணித்தியால அளவில் இந்த விஜயம் ஏன் அமைய வேண்டும். ஆட்பதிவு திணைக்களம் அறிமுகப்படுத்தவுள்ள விசேட அடையாள அட்டை உட்பட 10 முதல் 12 வரையிலான செயற்திட்டங்களை கைச்சாத்திடுவதற்கு இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக அறிய முடிகிறது.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இவ்வாறான நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சரின் துரித விஜயத்தின் நோக்கம் என்ன, ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் உண்மைத்தன்மை என்ன என்பதை அரசாங்கம் சபைக்கு அறிவிக்க வேண்டும்.

பதிலளித்த சுசில் பிரேமஜயந்த

இதன்போது எழுந்து பதிலளித்த சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha), இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் விஜயம் மற்றும் இந்திய பிரதமரின் உத்தேச விஜயம் தொடர்பில் என்னால் தற்போது ஏதும் குறிப்பிட முடியாது.

சரியான தகவல்கள் ஏதும் இல்லாமல் பதிலளிப்பது பொருத்தமானதாக அமையாது. ஆகவே இவ்விடயத்தை வெளிவிவகாரத்துறை அமைச்சின் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன் என்றார்.

இந்த நிலையில் மீண்டும் உரையாற்றிய விமல் வீரவன்ச, இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தின் தரவு கட்டமைப்புக்களை இந்தியாவுக்கு வழங்கல், அதானி குழுமத்துக்கு மின்கட்டமைப்பை வழங்கல் உள்ளிட்ட செயற்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டதாகவே இந்திய வெளியுறவு அமைச்சரின் விஜயம் காணப்படுகிறது. ஆகவே உண்மையை பகிரங்கப்படுத்துங்கள்“ என தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version