இலங்கைப் பிரஜைகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்திற்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
குறித்த திட்டத்தை செயற்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செல்லாததாக்க தீர்ப்பளிக்கக் கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவில் ஜனாதிபதி, பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya), டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் மற்றும் அமைச்சரவை உள்ளிட 31 பேர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
இலங்கைப் பிரஜைகளுக்கு டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் திட்டம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக மனுதாரர் குறிப்பிடுகின்றார்.
ஜனவரி 27 மற்றும் ஜூன் 2 ஆகிய திகதிகளில் இது தொடர்பாக இரண்டு அமைச்சரவை முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், பொதுமக்களுக்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ தெரிவிக்காமல் அமைச்சரவை முடிவு எடுக்கப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் 2022 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும், இந்த இரண்டு அமைச்சரவை முடிவுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் திருத்தம் செய்ய எடுக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமைச்சரவை முடிவுகள்
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கைப் பிரஜைகளின் பயோமெட்ரிக் தரவை இந்தியா அணுக அனுமதிக்கும் என்றும், இதன் மூலம் இந்தியா இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிட அனுமதிக்கும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் கொள்முதல் செயல்முறைக்கு மாறாக, திட்டத்தை இந்திய நிறுவனத்திற்கு மாற்றுவதற்கான அரசாங்கத்தின் முடிவு தன்னிச்சையானது மற்றும் சட்டவிரோதமானது என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது இலங்கையின் இறையாண்மை, தேசிய பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தில் ஒரு வெளிநாட்டு அரசு தலையிட வாய்ப்பளிக்கும் என்றும், இது அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகளை மீறும் என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தியாவுடன் தற்போதுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் தொடர்புடைய அமைச்சரவை முடிவுகளைச் செல்லாததாக்கும் உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்றும், இந்த அடையாள அட்டை திட்டத்தைச் செயல்படுத்துவதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுவில் மேலும் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
