இலங்கையின் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கனிஷ்க விஜேரத்ன தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
அவர் தனது பதவி விலகல் கடிதத்தை இன்று (07) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கையளித்துள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கனிஷ்க விஜேரத்னவின் நியமனம் தொடர்பில் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
மனுக்கள் விசாரணை
இதன்போது, பிரிதி பத்மன் சூரசேன, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் மேற்படி மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா, சமூக ஆர்வலர் விதுர ரலபனாவ மற்றும் ஊடகவியலாளர் ருவானி பொன்சேகா ஆகியோரால் இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக டபிள்யூ. ஏ. கே விஜேரத்னவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரையின் பேரில் அப்போதைய ஜனாதிபதி எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது எனவும், மேற்படி தீர்மானத்தை செல்லுபடியற்றதாக உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரி இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.