விபத்தை ஏற்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல மீதான கட்சி ரீதியான நடவடிக்கை தொடர்பில் ஆளும் தேசிய மக்கள் சக்திக்குள் முரண்பாடான தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதன்படி காவல்துறை தனது விசாரணையை முடித்து, தீர்ப்பை அறிவிக்கும் வரை, நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகருமான அசோக ரன்வல மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்று ஆளும் தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
முரண்பாடான கருத்துகள்
தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்க, இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்க வழங்கிய நேர்காணலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்க இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
ஊகங்களின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க முடியாது
சம்பவம் தொடர்பான பொதுமக்களின் ஊகங்களின் அடிப்படையில் கட்சி முடிவுகளை எடுக்க முடியாது.
பொது மக்கள் இந்த சம்பவம் குறித்து தனித்தனியாக என்ன நினைக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் இந்த சம்பவம் குறித்து கேள்வி கேட்கிறார்கள்.
காவல்துறைதான் முடிவு எடுக்க வேண்டிய அதிகாரம் கொண்டது.
காவல்துறை இதுவரை அறிவித்ததற்கு மேல் அல்லது அதற்கு அப்பால் எதுவும் எங்களுக்குத் தெரியாது.
காவல்துறையின் முடிவுகளுக்காகக் காத்திருப்பு
எனவே, அதற்கு மேல் நாங்கள் விவாதிக்கவில்லை. ஒரு சட்ட சூழ்நிலை ஏற்பட்டால், ஒரு கட்சியாக அது குறித்து நாங்கள் ஒரு முடிவை எடுப்போம்.
கட்சி அளவிலான எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்னர், போக்குவரத்து விபத்து சம்பவம் குறித்த காவல்துறையின் முடிவுகளுக்காகக் கட்சி காத்திருப்பதாகவும் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல செலுத்திய ஜீப் வண்டி மற்றொரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில், நாடாளுமன்ற உறுப்பினரும் மற்றைய காரில் பயணித்த சிறு குழந்தை உட்பட மூவரும் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
