Courtesy: Sivaa Mayuri
சீனாவின்(China) பீய் ஜிங்கில் நடைபெற்ற இராஜதந்திர ஆலோசனைகளின் போது கடன் மறுசீரமைப்பு குறித்து இலங்கையும் சீனாவும் கலந்துரையாடியுள்ளன.
இரண்டு நாடுகளும் 13ஆவது சுற்று தூதரக ஆலோசனைகளை நேற்று(18.06.2024) பீய்ஜிங்கில் நிறைவு செய்துகொண்டுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை
இலங்கையின் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் சீன மக்கள் குடியரசின் வெளிவிவகார பிரதி அமைச்சர் சன் வீடோங் ஆகியோர் தலைமையில் இந்த ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது, இரண்டு நாடுகளுக்கிடையிலான உயர்மட்ட வருகைகள், பொருளாதாரம் மற்றும் வர்த்தக மேம்பாடு, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை இரண்டு தரப்புக்களும் மதிப்பாய்வு செய்துள்ளன.
எனினும், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையான கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்த ஆலோசனையின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.