ஹோமாகம மருத்துவமனையின் சிறு ஊழியர்களில்
(minor employees) போதைக்கு அடிமையானவர்கள் பெருமளவானோர் உள்ளதாகவும் இவர்களின் இந்த செயற்பாடு வைத்தியசாலை சேவைகளின் செயல்திறனைப் பாதித்து நோயாளிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர்.
பல சிறு ஊழியர்கள் மெத்தம்பேட்டமைன் (ICE) உள்ளிட்ட சட்டவிரோத மருந்துகளை தங்கள் சக ஊழியர்களுக்கும், வைத்தியசாலை விடுதியில் தங்கியுள்ள உள் நோயாளிகளுக்கும் விற்பனை செய்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
விடுதிகளில் உள்ள நோயாளிகளுக்கு உதவ யாருமில்லை
மருத்துவமனையின் உள் நோயாளிகளின் சொத்துக்கள் திருடப்படுவது கட்டுப்பாடில்லாமல் நடப்பதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டினர். இரவில் மருத்துவமனை விடுதிகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு உதவ சிறு ஊழியர்கள் கிடைப்பதில்லை என்றும் அவர்கள் கூறினர்.
காவல்துறையினரால் கைது
இது தொடர்பில், மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் எரங்க ராஜபக்ச தெரிவிக்கையில், சிறு ஊழியர்களில் போதைக்கு அடிமையான பலர் உள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் இருவர் சமீபத்தில் ஹோமாகம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அவர்களுக்கு எதிராக தனியாக விசாரணை நடத்தப்படும் என்றும், நோயாளிகள் மற்றும் சக ஊழியர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் போதைக்கு அடிமையானவர்களின் செயல்பாடுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் தெரிவித்தார்.
