ஈழத்து தமிழ் நாடகத்தின் பெரு ஆளுமை, நாடக அரங்க கல்லூரியின் ஸ்தாபகர், ஈழத்து சிறுவர் நாடக தந்தை என அழைக்கப்படும் குழந்தை ம.சண்முகலிங்கம் காலமானார்.
யாழ்ப்பாணம் – திருநெல்வேலியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் நேற்றைய தினம் (17.01.2025) தனது 93வது வயதில் இயற்கை எய்தினார்.
நகைச்சுவை நாடகங்கள்
ஆங்கிலம், தமிழ், சிங்களம் மூன்று மொழிகளிலும் புலமையுள்ளவர். நுற்றுக்கு மேற்பட்ட சுயஆக்க நாடகங்களையும் அறுபதிற்கு மேற்பட்ட மொழிபெர்ப்பு நாடகங்களையும் தமிழ்நாடக உலகிற்கு தந்த பேராளுமை இவர்.
இவரது ஆற்றலும் ஆளுமையுமே நாடகமும் அரங்கியலும் என்ற பாடத்துறை தமிழில் வளர்ச்சியடையக்காரணமாக அமைந்தது. ஆசிரியராகப்பணியாற்றி ஓய்வு பெற்றதன் பின்னர் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் துறையை உருவாக்குவதில் பெரும் பணியாற்றியவர்.
திருநெல்வேலி இந்து வாலிபர் சங்கத்தில் விதானை செல்வரத்தினத்துடன் இணைந்து நகைச்சுவை நாடகங்களை நடித்ததிலிருந்து இவரது நாடக வாழ்க்கை ஆரம்பமாகியது.
யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழாராய்ச்சி மகாநாட்டில் இவரது வையத்துள் தெய்வம் என்ற நாடகம் முதல்முதலில் மேடையேற்றப்பட்டது.
நாடகமும் அரங்கியலும்
இதன் பின்னர் நாடகங்களை எழுத ஆரம்பித்த அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நாடக டிப்ளோமா பயிற்சியை தனது 45வது வயதில் பெற்றுக்கொண்டார்.
பின்னர் யாழ்ப்பாணத்தில் நாடக அரங்கக்கல்லூரியை உருவாக்கிய இவர் உலகப்புகழ்பெற்ற நாடகர் தாஸிசியஸ் உடன் இணைந்து ஈழத்து நாடகர்களுக்கு தொடர்பயிற்சியை வழங்கியவர். நாடகம் கல்வியாக வரவேண்டும் அதனைக்கற்றறிந்து செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தியவர்.
யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் பாடம் ஒரு துறையாக வளர்ச்சியடைந்துள்ளதென்றால் அதற்கு மூலகாரணமானவர் குழந்தை ம. சண்முகலிங்கம். மாணவர்கள் கற்பதற்காக ஏராளமான ஆங்கில நூல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
யாழ்ப்பாண தேசிய கல்வியியல் கல்லூரியில் நாடகமும் அரங்கியலும் பாடத்தை ஆரம்பிக்க இவரது பணிமுக்கியமானது. ஆசிரியர்களுக்கான நாடகக்களப்பயிற்சிகள் பலவற்றை நடத்தி ஆசிரியர்களை நாடகத்துறையில் உருவாக்கியவர். இவருக்கு நீண்ட மாணவர் பரம்பரை உண்டு.
கலாநிதி பட்டம்
இவரது தனி முயற்சியால் பல இளைஞர்கள் நாடகத்தைக்கற்று தேர்ந்து ஆசிரியர்களாகப் பணியாற்றுகிறார்கள். இவரது நாடகங்கள் சமூக அரசியல் நிலைமைகளைப் பேசியிருக்கின்றன.
க.பொ.த உயர்தரத்தில் நாடகத்தை ஒரு பாடமாகக் கொண்டுவர அவரது பங்களிப்பு முக்கியமானது. இதற்காக இலவசமாக நாடகத்தை பல ஆண்டுகள் கற்பித்தவர்.
தனது கருத்துக்களை நாடகத்தினூடாக சொல்வதில் எந்த சமரசத்துக்கும் செல்லாதவர். இவரது முக்கியமான நாடகங்களாக மண்சுமந்த மேனியர், எந்தையும் தாயும், அன்னையிட்ட தீ, ஆர்கொலோ சதுரர், கூடிவிளையாடு பாப்பா, பஞ்சவர்ணநரியார் போன்ற பலவற்றைக் குறிப்பிடலாம்.
இவரது நாடகப்பணியைப் போற்றி கிழக்குப்பல்கலைக்கழகம் இவருக்கு கெளரவ கலாநிதி பட்டம் வழங்கி கொளரவித்துள்ளது.
இவரது இழப்பு ஈழத்து நாடக உலகிற்கு ஈடுசெய்ய முடியாதது. தனிமனிதனாக தன்னலம் கருதாது நாடகமும் அரங்கியலும் துறைக்கு அளப்பெரிய பணியை ஆற்றியிருப்பதோடு, பல்கலைக்கழக நாடகத்துறையை உருவாக்கி வளர்த்த பெருமைக்குரியவர்.