சர்வதேச மட்டத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பிரித்தானிய (British) பொதுத்தேர்தலில் இம்முறை அதிக எண்ணிக்கையான பிரிட்டன் வாழ் ஈழத்தமிழர்கள் போட்டியிடவுள்ளனர்.
குறித்த தேர்தலானது இன்று (04) நடைபெறவுள்ள நிலையில் இலங்கையைப் (Sri Lanka) பூர்வீகமாகக்கொண்ட அறுவர் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகும் நோக்கில் இந்தத் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
கடந்த காலத்தை விட தற்போது அதிகளவான குறிப்பாக ஆறு ஈழத்தமிழர்கள் பிரித்தானிய பொதுத்தேர்தலில் போட்டியிடுவதுடன் தொழிற்கட்சியின் சார்பில் உமா குமாரன் (Uma Kumaran) மற்றும் டெவினா போல் (devina paul), கொன்சவேட்டிவ் கட்சியின் சார்பில் கெவின் ஹரன் (Kavin Haran), த க்ரீன் கட்சியின் சார்பில் நாராணி ருத்ரா ராஜன் (Rudra Rajan), லிபரல் டெமோகிரட்ஸ் கட்சியின் சார்பில் கமலா குகன் (Kamala Kugan) மற்றும் ரிஃபோர்ம் யு.கே கட்சியின் சார்பில் மயூரன் செந்தில்நாதன் (Mayuran Senthilnathan) ஆகியோரே நடைபெறவிருக்கும் பிரித்தானிய பொதுத்தேர்தலில் போட்டியிடவிருக்கும் இலங்கை பின்னணியைக்கொண்ட தமிழர்களாவர்.
ஈழத்தமிழர் விவகாரம்
அவர்கள் ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பான தமது அணுகுமுறை மற்றும் போர்க்குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச்செய்வதில் தாம் கொண்டிருக்கும் கட்டுப்பாடு என்பன குறித்து கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதனடிப்படையில், கிழக்கு லண்டனில் பிறந்த உமா குமாரனின் பெற்றோர் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக்கொண்டவர்களும் போரின் விளைவாக பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்தவர்களுமாவர்.
2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் இன்றை வரை ஒருவர் கூட பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவில்லை என்பதை நம்பமுடியவில்லை என உமா குமாரன் தெரிவித்துள்ளார்.
சகல கட்டமைப்பு
அத்தோடு, இப்போரின் போது இடம்பெற்ற உயிரிழப்புக்களையும், சொத்து இழப்புக்களையும் ஒரு போதும் மறவோமெனவும் நான் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகும் பட்சத்தில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதையும் மற்றும் நீதியை நிலைநாட்டுவதையும் முன்னிறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் உள்ளடங்கலாக சகல கட்டமைப்புக்களுடனும் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பிரித்தானியாவில் பிறந்த கெவின் ஹரனின் தந்தை யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக்கொண்டவரும் 1970 களின் இறுதியில் பிரிட்டனுக்குப் புலம்பெயர்ந்தவருமாவார்.
இந்தநிலையில், யுத்தத்தின் போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் நீதி நிலை நாட்டப்பட வேண்டும் அத்தோடு இலங்கை உரோம் பிரகடனத்தில் கையெழுத்திடவில்லை எனவே ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையில் தீர்மானமொன்றைக் கொண்டு வருவதன் ஊடாகவே இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தமுடியும்.
இவ்விடயத்தில் இராஜதந்திர அணுகுமுறை இன்றியமையாததாகும் என கெவின் ஹரன் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி
இது தொடர்பில் நாராணி ருத்ரா ராஜன் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் 2009 ஆம் ஆண்டு மிகமோசமான முறையில் போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட போதும் 2022 இல் தீவிர பொருளாதார நெருக்கடியின் போதும் பிரித்தானிய அரசாங்கங்கள் உரியவாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தவறியுள்ளன.
இருப்பினும் எமது கட்சி இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆதாரங்களைத் திரட்டுவதற்கும் மற்றும் போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கும் அவசியமான அழுத்தங்களைத் தொடர்ந்து வழங்கும்.
சமாதானம், அங்கீகாரம் மற்றும் நீதி என்பவற்றை அடைந்து கொள்வதற்கான தமிழர்களின் போராட்டத்தில் தொழிற்கட்சி எப்போதும் தோளோடு தோள் கொடுத்து வந்திருக்கின்றது.
அதன்படி நான் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானால் ஈழத்தமிழர்களுக்கான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலைத் தொடர்ந்து வலியுறுத்திவரும் எமது கட்சியின் ஏனைய தலைவர்களுடன் இணைந்து அந்நோக்கத்தை முன்னிறுத்தி செயற்படுகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.