Home இலங்கை அரசியல் ரணிலின் சின்னம் தொடர்பிலான முறைப்பாடு: மறுக்கும் ஆணைக்குழு அதிகாரி

ரணிலின் சின்னம் தொடர்பிலான முறைப்பாடு: மறுக்கும் ஆணைக்குழு அதிகாரி

0

சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) வழங்கப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் குறித்து ஒரு தரப்பினர் முன்வைத்துள்ள முறைப்பாடு அடிப்படையற்றது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க (R.M.L Ratnayakka) தெரிவித்துள்ளார். 

தேர்தல்கள் அலுவலகத்தில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும், “உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்துக்கும், ஜனாதிபதித் தேர்தல் சட்டத்துக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆகவே இந்த முறைப்பாட்டை ஏற்க முடியாது. 

சிலிண்டர் சின்னம் 

அதேவேளை, தபால் மூல வாக்களிப்புக்கு 7 இலட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் தகுதிப் பெற்றுள்ளார்கள். எதிர்வரும் 26ஆம் திகதி வாக்களிப்பு அட்டைகள் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு விநியோகிக்கப்படும்.

செப்டெம்பர் 21ஆம் திகதி வாக்கெடுப்புக்கான வாக்களிப்பு அட்டைகள் செப்டம்பர் மாதம் முதல்வாரத்தில் கிராம சேவகர் பிரிவுகள் ஊடாக வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படும்.

சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் சின்னம் குறித்து ஒரு தரப்பினர் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்துள்ளார்கள்.

இந்த முறைப்பாடு அடிப்படையற்றது. ஏனெனில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்துக்கு அமைவாகவே சிலிண்டர் சின்னம் ஒரு தரப்பினருக்கு வழங்கப்பட்டது.

வர்த்தமானி வெளியீடு 

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் நபருக்கு சிலிண்டர் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்துக்கும், ஜனாதிபதித் தேர்தல் சட்டத்துக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

ஆகவே, இந்த முரண்பாட்டை நிராகரித்துள்ளோம்.

தேர்தல் செலவுகள் ஒழுங்குப்படுத்தல் சட்டத்துக்கு அமைய வேட்பாளர் ஒருவர் வாக்காளர் ஒருவருக்கு செலவழிக்க வேண்டும் என்பது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து வேட்பாளர்களும் இந்த சட்டத்துக்கு அமைய செயற்பட வேண்டும்.

வாக்கெடுப்பு நிறைவடைந்து 21 நாட்களுக்குள் வேட்பாளர் தேர்தல் கால செலவுகள் குறித்து உரிய ஆவணங்களை ஆணைக்குழுவுக்கு ஒப்படைக்க வேண்டும்.

அது மாத்திரமன்றி, சட்டத்துக்கு முரணாக செயற்படும் வேட்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்” என சுட்டிக்காட்டியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version