Home இலங்கை சமூகம் ஏமாற்றத்தில் முடிவடைந்த புதையல் தோண்டும் பணி : வெறுங்கையுடன் திரும்பிய அதிகாரிகள்

ஏமாற்றத்தில் முடிவடைந்த புதையல் தோண்டும் பணி : வெறுங்கையுடன் திரும்பிய அதிகாரிகள்

0

நீதிமன்ற உத்தரவுக்கமைய, வெயாங்கொடை, வந்துராவ பிரதேசத்தில் சதுப்பு நிலப்பகுதியில் இருப்பதாக கூறப்பட்ட புதையல் கண்டுபிடிக்கும் பணி 3 நாள் அகழ்வுப் பணிகளின் பின்னர் எதுவும் கிடைக்காத நிலையில் இன்று(23) மாலை 4 மணியளவில் நிறைவடைந்தன.

வெயாங்கொடை, வந்துராவ பிரதேசத்தின் ஊடாக நிர்மாணிக்கப்படும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் புதையல் இருப்பதாக வதந்தி பரவியதையடுத்து, பலர் இங்கு சட்டவிரோதமாக அகழ்வு செய்தனர்.

எனினும்,புதையல் தோண்டிய பலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

நீதிமன்றின் உத்தரவு

ஆனால் அந்த இடத்தில் மீண்டும் மீண்டும் புதையல் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகள் ஆபத்தில் இருந்தன.

வெயாங்கொடை காவல்துறையினர் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்ததையடுத்து, அத்தனகல்ல நீதவான் அந்த இடத்தில் புதையல் உள்ளதா என்பதை கண்டறியுமாறு காவல்துறை விசேட அதிரடிப்படையினருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, தொல்பொருள் திணைக்களம், புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மீரிகம பிரதேச செயலகம் ஆகிய அரச நிறுவனங்களின் அதிகாரிகளின் மேற்பார்வையில் நேற்று முன்தினம்(21) பொதுமக்கள் முன்னிலையில் புதையல் கண்டுபிடிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது.

ஏமாற்றத்தில் முடிவடைந்த நடவடிக்கை

முதல் நாளான நேற்று முன்தினம் மழை குறுக்கிட்டதால் அகழ்வாராய்ச்சியில் எதுவும் கிடைக்காத நிலையில், 2வது நாளான நேற்று(22) நடந்த அகழாய்வில் பெரிய கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

நேற்று மதியம் பாரம் தூக்கி கொண்டு வந்து கல்லை அகற்றியும் பணியை முடிக்க முடியவில்லை.

அகழ்வு பணிகளுக்கு அத்தனகல்ல நீதவான் நீதிமன்றம் இரண்டு நாட்களே அவகாசம் வழங்கியிருந்த நிலையில், அந்த கால அவகாசம் நேற்று பிற்பகல் நிறைவடைந்தது.

நீதிமன்றத்திற்கு திரும்புவதற்கு முன்னர் அகழ்வுப் பணிகளுக்கான மற்றுமொரு நாளாக இன்றைய தினம் (23)எடுத்துக்கொள்ளப்பட்டதாக வெயாங்கொட காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதன்படி, மூன்றாவது நாளாக இன்று காலை 9 மணிக்கு புதையல் தோண்டும் பணி தொடங்கியது. அங்கு கூடியிருந்த அனைத்து அரசு அதிகாரிகளின் உடன்படிக்கையின்படி இன்று மாலை 4 மணியளவில் புதையல் அல்லது தொல்லியல் மதிப்புள்ள எதுவும் கிடைக்காததால் அகழாய்வு பணி நிறைவு பெற்றது.

இது தொடர்பில் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை அறிக்கையிட்டு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அங்கிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த இடத்தில் தொல்பொருள் பெறுமதியான எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் இன்று தெரிவித்துள்ளார்.

Source: https://ibctamil.com/article/excavation-to-find-veyangoda-treasure-ends-1732371798

NO COMMENTS

Exit mobile version