இன்னும் தமது சொத்துக்கள் மற்றும் கடன்கள் தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்காத அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் சமர்ப்பிக்குமாறு “இறுதி அறிவிப்பு” விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) விடுத்துள்ளது.
அந்தவகையில், ஆணைக்குழுவானது நாடாளுமன்ற செயலாளர் மற்றும் அதிபரின் செயலாளர் ஆகியோருக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளதுடன் இதுவரையில் தமது சொத்துக்கள் மற்றும் கடன் பிரகடனங்களை கையளித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பெயர் பட்டியலை சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இதனடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான பிரகடனங்களை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கும் அதேவேளை அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அத்தகைய பிரகடனங்களை அதிபரின் செயலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
மேலும், தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிக்கைகளை சமர்ப்பிக்காதவர்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு கூடுதல் கட்டணம் விதிக்க தமக்கு அதிகாரம் உள்ளது என ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.