Home இலங்கை அரசியல் வடக்கின் இரு மாவட்டங்களில் நிலவும் பாரிய குறைப்பாடு: சுட்டிக்காட்டும் செல்வம் எம்.பி

வடக்கின் இரு மாவட்டங்களில் நிலவும் பாரிய குறைப்பாடு: சுட்டிக்காட்டும் செல்வம் எம்.பி

0

முல்லைத்தீவு(Mullaitivu) மற்றும் மன்னார்(Mannar) மாவட்டங்களில் தீயணைப்பு படை இல்லாத காரணத்தினால் திடீரென்று ஏற்படும் தீ விபத்துகளின் போது பெரும் சிக்கல்களை எதிர் நோக்க வேண்டி இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்(Selvam Adaikalanathan) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய(05.03.2025) அமர்வின் போது உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “முல்லைத்தீவு மாவட்டம் நிலப்பரப்பால் பெரிய மாவட்டமாக உள்ளது.

தீயணைப்புப் படை

இந்த மாவட்டத்தில் கடைகள், விவசாய நிலங்கள் என்பவற்றில் தீ ஏற்பட்டால் உடனடியாக அணைப்பதற்கு இந்த மாவட்டத்தில் தீயணைப்புப் படை இல்லை.

வவுனியா அல்லது யாழ். மாவட்டத்தில் இருந்து தீயணைப்புப் படை வந்து தீயை அணைக்க வேண்டிய நிலையில் உள்ளது.

மக்கள் தீயால் பாதிக்கப்படும் பொழுது தீயை அணைப்பதற்கு பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

இதனை அரசு கருத்தில் கொண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கம் தீயணைப்புப் படையை உருவாக்க வேண்டும்.

மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டத்தில் பல கடைகள், பனைகள் , வயல் நிலங்கள் என்பவை உள்ளது. இவற்றில் தீ பரவல் ஏற்பட்டால் தீயை அணைப்பதற்கு மன்னார் மாவட்டத்தில் தீயணைப்புப் படை இல்லை.

அண்மையில் மன்னாரில் பல பனைகள் எரிந்து தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டது. பல பனைகள் எரிந்து முடிவடைந்த பின்னரே வவுனியாவில் இருந்து தீயணைப்புப் படை வந்தது.

நாங்கள் கடந்த அரசாங்கத்திடமும் இந்த இரு மாவட்டங்களுக்கும் தீயணைப்புப் படையை உருவாக்க வேண்டும் என்று கேட்டு இருந்தோம். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version