புதிய இணைப்பு
மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம் மிஹாலுக்கு எதிராக கொழும்பில் (Colomno) அவதூறு சுவரொட்டியை அச்சடித்து காட்சிப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்காவிற்கு முன்பிணை வழங்க கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று (23) மறுப்பு தெரிவித்துள்ளார்.
கொழும்பு குற்றப்பிரிவு சார்பில் அரசாங்கத் சட்டத்தரணி ஜாகொட ஆராச்சி முன்வைத்த காரணங்களை பரிசீலினைக்கு எடுத்து கொண்ட பின்னரே முன்பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் தன்னை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதால் , முன்பிணை கோரி ஸ்ரீ ரங்கா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கொழும்பு குற்றப்பிரிவுக்கு எதிரான் மனுவே நிராகரிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஶ்ரீரங்கா (J.Sri Ranga) தலைமறைவாகியுள்ளதாக கொழும்பு (Colombo) குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
மன்னார் (Mannar) மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாலை அவதூறு செய்யும் வகையில் கொழும்பில் சுரொட்டிகளை ஒட்டிய சம்பவத்தின் பிரதான சந்தேக நபராகவும் திட்டமிட்ட நபராகவும் ஶ்ரீரங்கா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரதான சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே நேற்று குற்ற விசாரணைப் பிரிவிடம் வினவியிருந்தார்.
கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர்
இதன்போது, சந்தேகநபர் ஶ்ரீரங்கா வீட்டில் இல்லை எனவும் தலைமறைவாகியுள்ளதாகவும் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் ஶ்ரீரங்கா பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள அவரது இல்லத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக அதிகாரிகள் மேலும் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.
ஶ்ரீரங்காவின் ஆலோசனைக்கு அமைய மன்னார் நீதிபதியை இழிவுபடுத்தும் வகையில் கொழும்பில் சுவரொட்டிகளை ஒட்டியதாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
பிரதான சந்தேகநபர் தற்போது வீட்டில் இல்லாத நிலையில் அவரை தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.